திருத்துறைப்பூண்டி, கந்தர்வகோட்டையில் வெற்றி குடிசையிலிருந்து கோட்டைக்கு கம்யூனிஸ்ட் எம்எல்ஏக்கள்

திருத்துறைப்பூண்டி: திருத்துறைப்பூண்டி, கந்தர்வகோட்டை சட்டமன்ற தொகுதிகளில் வெற்றிபெற்ற இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் எம்எல்ஏக்கள் குடிசையிலிருந்து கோட்டைக்கு செல்லும் பெருமை பெற்றுள்ளனர்.  திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி சட்டமன்ற தொகுதியில் திமுக கூட்டணி சார்பில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர் க.மாரிமுத்து போட்டியிட்டார். இவர், தன்னை எதிர்த்து போட்டியிட்ட அதிமுக வேட்பாளர் சுரேஷ்குமாரை விட 29,102 வாக்குகள் அதிகம் பெற்று வெற்றி பெற்றார். எம்எல்ஏவான மாரிமுத்துவின் சொந்த ஊர் திருத்துறைப்பூண்டியில் இருந்து 15 கி.மீ. தூரமுள்ள கோட்டூர் ஊராட்சி ஒன்றியத்தை சேர்ந்த காடுவாகுடி கிராமம். கூரை வீட்டில் வசித்து வருகிறார். இவரது மனைவி ஜெயசுதா, தாய் தங்கம்மாள். விவசாய கூலி தொழிலாளர்கள்.

 இதேபோல் புதுக்கோட்டை மாவட்டத்தில் கந்தர்வகோட்டை(தனி) தொகுதியில் திமுக கூட்டணியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் போட்டியிட்ட வேட்பாளர் சின்னதுரை, அதிமுக வேட்பாளர் ஜெயபாரதியை விட 12,721 வாக்குகள் அதிகம் பெற்று வெற்றி பெற்றார். இதன் மூலம் மாவட்டத்தின் முதல் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி எம்எல்ஏவாக சின்னதுரை தேர்வு செய்யப்பட்டுள்ளார். இவரது மனைவி 100 நாள் வேலைத்திட்ட பணியாளர். ஓட்டு வீட்டைத்தவிர வேறு எந்த சொத்தும் இல்லை என பிரமாண பத்திரம் தாக்கல் செய்துள்ளார். எளிய குடும்பத்தில் இருந்து வெற்றி பெற்றுள்ள சின்னதுரையை பல்வேறு கட்சியினர், தொழிலாளர்கள், கிராம மக்கள் நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்தனர். இரு எம்எல்ஏக்களும் முதல் முறையாக சட்டமன்ற தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்றுள்ளனர். இதன் மூலம் குடிசைகளில் வசித்து வரும் திருத்துறைப்பூண்டி, கந்தர்வகோட்டை எம்எல்ஏக்கள் மாரிமுத்து, சின்னதுரை கோட்டைக்கு செல்லும் பெருமை பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

Related Stories: