புதுவையில் பாஜவுக்கு துணை முதல்வர் பதவி கிடையாது: ரங்கசாமி பரபரப்பு பேட்டி : மாநில நிர்வாகிகள் அதிர்ச்சி

புதுச்சேரி: புதுவையில் துணை முதல்வர் பதவி என்பது இதுவரை இல்லை, இனியும் இல்லை என சேலத்தில் என்ஆர்.காங்கிரஸ் தலைவர் ரங்கசாமி தெரிவித்தார். புதுச்சேரி சட்டமன்ற தேர்தலில் என்ஆர்.காங்கிரஸ் 10 இடங்களிலும், கூட்டணி கட்சியான பாஜக 6 இடங்களிலும் வெற்றி பெற்று, தேசிய ஜனநாயக கூட்டணி தனிப்பெரும்பான்மை பெற்றது. இதையடுத்து என்ஆர்.காங்., தலைவர் ரங்கசாமி, தனது கட்சி மற்றும் பாஜ எம்எல்ஏக்கள் கையெழுத்திட்ட கடிதத்தை கவர்னர் தமிழிசையிடம் அளித்து ஆட்சியமைக்க உரிமை கோரினார். முதல்வராக ரங்கசாமி நாளை (7ம் தேதி) பதவியேற்க உள்ளார். இதற்கிடையே, முன்னாள் அமைச்சர் நமச்சிவாயத்துக்கு துணை முதல்வர் பதவி அளிக்க பாஜ திட்டமிட்டு காய் நகர்த்தி வருகிறது. புதுச்சேரி யூனியன் பிரதேச சட்டப்படி துணை முதல்வர் பதவி என்பது இல்லை. இதனால் சட்டத்தில் மத்திய அரசு திருத்தம் செய்ய இருப்பதாக தகவல் பரவி வருகிறது.

ரங்கசாமி ஒவ்வொரு முறையும் முக்கிய நிகழ்வுகளின்போது சேலம் சூரமங்கலத்தில் உள்ள அப்பா பைத்தியம் சுவாமி கோயிலுக்கு சென்று தரிசனம் செய்வது வழக்கம். இந்நிலையில் முதல்வராக ரங்கசாமி பதவியேற்க இருப்பதையொட்டி, நேற்று மதியம் அவரும், எம்எல்ஏக்கள் திருமுருகன், ரமேஷ் ஆகியோரும் சேலம் அப்பா பைத்தியம் சுவாமி கோயிலுக்கு வந்தனர். அமைச்சர்கள் பட்டியல் மற்றும் தேர்தலில் வெற்றி பெற்றதற்கான சான்றிதழை அப்பா பைத்தியம் சுவாமி சன்னதியில் வைத்து சுமார் அரை மணிநேரம் ரங்கசாமி வழிபாடு செய்தார்.

பின்னர் அவர் அளித்த பேட்டி:

வரும் 7ம் தேதி (வெள்ளிக்கிழமை) பதவி ஏற்பு விழா நடக்கிறது. பாஜக 3 அமைச்சர் பதவிகளை கேட்பதாக எந்த ஒரு தகவலும் இல்லை. அமைச்சரவையில் பாஜக இல்லாமல் எப்படி ஆட்சி அமைக்க முடியும். இது தேசிய ஜனநாயக கூட்டணி அல்லவா. புதுச்சேரியின் வளர்ச்சிக்கு துணைநிலை ஆளுநர் முழு ஒத்துழைப்பு தருவார். புதுவையில் துணை முதல்வர் பதவி என்பது இதுவரை இல்லை. இனியும் இல்லை. மத்திய அரசு கூறினால், அது குறித்து பரிசீலிப்போம். தமிழக முதல்வராக ஸ்டாலின் பொறுப்பேற்க உள்ளார். அவருக்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்கள். புதுச்சேரி மாநில வளர்ச்சிக்கு முழு நேரமும் எங்களை ஈடுபடுத்திக் கொள்வோம்.

இவ்வாறு ரங்கசாமி கூறினார்.

பாஜகவுக்கு துணை முதல்வர் மற்றும் 3 அமைச்சர்கள் குறித்து ரங்கசாமி அளித்த பதிலால் புதுச்சேரி பாஜக நிர்வாகிகள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். அமைச்சர்கள் தவிர்த்து ரங்கசாமி மட்டும் முதல்வராக பதவியேற்பதற்கு பாஜவினர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இது குறித்து புதுச்சேரி பாஜ முக்கிய நிர்வாகி ஒருவரிடம் கேட்டதற்கு, தேசிய ஜனநாயக கூட்டணி என்ற முறையில் இணைந்து தான் போட்டியிட்டோம். ஆகையால் இதுபற்றி கட்சி தலைமையிடம் புகார் தெரிவிப்போம். அமைச்சர்களும் இத்துடன் பதவி ஏற்க என்.ஆர்.காங்கிரஸ் தலைவர் முடிவு செய்ய வேண்டும். முதல்வர் மட்டும் பதவி ஏற்க விடமாட்டோம் என்றனர்.

Related Stories:

>