கொரோனா வைரஸ் தீவிரமாக பரவுவதால் 3வது அலையை தவிர்க்க முடியாது: மத்திய அரசின் அறிவியல் ஆலோசகர் எச்சரிக்கை

புதுடெல்லி: கொரோனா வைரசின் 2வது அலையே ஓயாத நிலையில், ‘3வது அலை ஏற்படுவதை தவிர்க்க முடியாது. அதற்கு நாம் இப்போதே தயாராக வேண்டும்’ என மத்திய அரசின் முதன்மை அறிவியல் ஆலோசகர் விஜயராகவன் கூறியிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.  கொரோனா வைரஸ் முதல் அலையைக் காட்டிலும் 2வது அலை மிகக் கடுமையாக உள்ளது. தினசரி தொற்று 4 லட்சத்தை நெருங்கிய நிலையில், மொத்த பாதிப்பு 2 கோடியை தாண்டி விட்டது. பலி எண்ணிக்கை 2 லட்சத்து 26 ஆயிரமாக அதிகரித்துள்ளது. கடந்த சில நாட்களாக பலி எண்ணிக்கை கணிசமாக அதிகரிப்பது மக்களை பீதிக்குள்ளாக்கி இருக்கிறது. மருத்துவமனைகள் நிரம்பி, ஆக்சிஜன் தட்டுப்பாடு ஏற்பட்டு நோயாளிகள் மிகுந்த சிரமப்பட்டு வருகின்றனர். கார்களில் மருத்துவ ஆக்சிஜன் சிலிண்டர் பொருத்தி அவற்றையே தற்காலிக கொரோனா வார்டாக மாற்றி குடும்பத்தினர் உயிரை காப்பாற்ற மக்கள் போராடி வருகின்றனர். இப்படிப்பட்ட நிலையில், 2வது அலையின் கோரதாண்டவமே இன்னும் ஓயாத நிலையில், 3வது அலை தவிர்க்க முடியாதது என மத்திய அரசின் முதன்மை அறிவியல் ஆலோசகர் விஜயராகவன் கூறி இருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

அவர் நேற்று அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது: கர்நாடகா, கேரளா, ஆந்திரா, தமிழ்நாடு, மேற்கு வங்கம், ராஜஸ்தான், பீகார் ஆகிய மாநிலங்களில் தினசரி பாதிப்பு எண்ணிக்கை அதிகரித்த வண்ணம் உள்ளது. 2வது அலை கொரோனா வைரஸ் மிகத் தீவிரமாக இருப்பதை பார்க்கும் போது, 3வது அலை ஏற்படுவதை தவிர்க்க முடியாது. நீண்டகால கொரோனா அலைகள் இந்தளவுக்கு தீவிரமாக இருக்குமென இதற்கு முன் கணிக்கப்படவில்லை. ஆனால் 3வது அலை எப்போது ஏற்படும் என்பதை துல்லியமாக கூற முடியாது. இருந்தாலும், புதிய அலையை எதிர்கொள்ள தயாராக இருக்க வேண்டும். புதிய உருமாற்ற வகைகளையும் தடுக்கக் கூடிய வகையில் தடுப்பூசியை மேம்படுத்த வேண்டும். அதிகளவில் தடுப்பூசி போடுவதை ஊக்கப்படுத்த வேண்டும். புதிய உருமாற்ற வைரஸ்கள் அசல் திரிபுகளைப் போலவே பரவுகின்றன. அவை புதிய வகையான பரிமாற்றத்தின் பண்புகளைக் கொண்டிருக்கவில்லை. அசல் திரிபுகளைப் போலவே மனிதர்களைப் பாதிக்கிறது, ஆரம்பத்தில் வேகமாக பரவுகிறது, வைரஸ் நகல்களை உருவாக்குகிறது.

இவ்வாறு அவர் கூறினார்.

முன்னதாக, எய்ம்ஸ் இயக்குநர் ரன்தீப் குலேரியா கூறுகையில், ‘‘கொரோனாவின் தீவிரத்தை கட்டுப்படுத்த முழு ஊரடங்கு மட்டுமே ஒரே தீர்வாகும். இங்கிலாந்தை போல கடுமையான ஊரடங்கு பிறப்பிக்கப்பட வேண்டும். இரவு நேர ஊரடங்கு, பகுதி நேர ஊரடங்கு போன்றவை முழு பலனை தராது. குறைந்தபட்சம் 2 வார கடுமையான ஊரடங்கு அவசியம். 3வது ஊரடங்கு ஏற்பட வாய்ப்புகள் நிறைய உள்ளன. ஆனால் அதற்குள் நாம் அதிகளவில் தடுப்பூசியை பெற்றிருப்போம். அதனால் அடுத்தடுத்த அலைகளில் எளிதாக சமாளிக்கலாம்’’ என கூறி இருந்தார்.

குஜராத்தில் தடையை மீறிய பக்தர்கள்

ஹரிதுவார் கும்பமேளாவில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை காற்றில் பறக்கவிட்டு லட்சக்கணக்கான பக்தர்கள் குவிந்தனர். இதனால், கொரோனா பரவல் தீவிரமடைந்த நிலையில், மத வழிபாட்டு நிகழ்ச்சிகளுக்கு பல மாநிலங்களும் தடை விதித்துள்ளன. இந்நிலையில், குஜராத் மாநிலத்தில் கொரோனா தடுப்பு விதிகளை மீறி உரிய அனுமதியின்றி நேற்று நூற்றுக்கணக்கான பெண் பக்தர்கள் பங்கேற்ற மத வழிபாட்டு நிகழ்ச்சி அரங்கேறியுள்ளது. அகமதாபாத் மாவட்டம் நவபுரா கிராமத்தில்

நூற்றுக்கணக்கான பெண் பக்தர்கள் முகக்கவசம் அணியாமல் பால்குடம் தூக்கி ஊர்வலமாக சென்று நேர்த்திக்கடன் செலுத்தினர். இதனால், அப்பகுதியில் வைரஸ் பாதிப்பு பல மடங்கு அதிகரிக்கலாம் என்ற அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது. இந்த விவகாரம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீசார் 20க்கும் மேற்பட்டோரை கைது செய்துள்ளனர்.

Related Stories:

>