ஆக்சிஜன் பற்றாக்குறையால் ஏற்படும் இறப்பு இனப்படுகொலைக்கு நிகரானது: அலகாபாத் நீதிமன்றம் கடும் கண்டனம்

லக்னோ: ‘ஆக்சிஜன் பற்றாக்குறையால் கொரோனா நோயாளிகளை இறக்க விடுவது, இனப்படுகொலைக்கு நிகரான குற்றமாகும்’ என அலகாபாத் உயர் நீதிமன்றம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. கொரோனா 2வது அலையால் நாடு முழுவதும் மருத்துவமனைகள் நிரம்பி வழிகின்றன. பல மாநிலங்களில் ஆக்சிஜன் சிலிண்டர் பற்றாக்குறையால் பலர் கொத்து கொத்தாக இறந்து வருகின்றனர். இந்நிலையில், உத்தரப்பிரதேச மாநிலம் மீரட் மற்றும் லக்னோ மாவட்டங்களில் ஆக்சிஜன் பற்றாக்குறையால் கொரோனா நோயாளிகள் இறப்பது தொடர்பாக வழக்கு அலகாபாத் உயர் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் அஜித் குமார் மற்றும் சித்தார்த்தா வர்மா ஆகியோர் பிறப்பித்த உத்தரவில், ‘‘ஆக்சிஜன் சப்ளை இல்லை என்பதால் கொரோனா நோயாளிகள் மரணமடையும் நிலையை கண்டு துயரப்படுகிறோம். மருத்துவமனைகளுக்கு தேவையான ஆக்சிஜனை சப்ளை செய்யாமல் இருப்பது கிரிமினல் குற்றமாகும். இதனால் மரணம் ஏற்பட விடுவது, இனப்படுகொலைக்கு சற்றும் குறைவில்லாத செயலாகும். எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இதற்கு பொறுப்பேற்க வேண்டும்.

இதய மாற்று அறுவைசிகிச்சை மற்றும் மூளை அறுவை சிகிச்சைகள் நடைபெறும் அளவிற்கு, அறிவியல் முன்னேற்றம் கண்டுள்ள இந்த யுகத்தில், ஆக்சிஜன் பற்றாக்குறையால் மக்கள் இறப்பதை எப்படி சகித்துக்கொள்ள முடியும். இதுதொடர்பாக தேவையான விசாரணைகளை லக்னோ மற்றும் மீரட் மாவட்ட நீதிமன்றங்கள் மேற்கொள்ள வேண்டும்’’ என கூறினர். மீரட், லக்னோ மருத்துவமனைகளில் ஆக்சிஜன் தட்டுப்பாட்டால் கொரோனா நோயாளிகள் இறந்ததாக சமூக வலைதளங்களில் பரவிய செய்திகளின் அடிப்படையில் இவ்வழக்கை அலகாபாத் நீதிமன்றம் விசாரித்துள்ளது. முன்னதாக, தங்கள் மாநிலத்தில் ஆக்சிஜன் தட்டுப்பாடு இல்லை என்றும் தவறான தகவல் வெளியிடுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அம்மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத் எச்சரித்தது குறிப்பிடத்தக்கது.

பொறுப்பேற்க வேண்டும்

காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி தனது டிவிட்டர் பதிவில், ‘‘ஆக்சிஜன் பற்றாக்குறையால் உபியில் இறப்புகள் எதுவும் ஏற்படவில்லை என உபி அரசு தொடர்ந்து மறுத்து வந்தது. ஆக்சிஜன் பற்றாக்குறை குறித்து தகவல் வெளியிடுவோரை அச்சுறுத்துகிறது. உண்மை என்னவென்றால், ஆக்சிஜன் பற்றாக்குறையால் இறப்புகள் நிகழ்ந்துள்ளன. அதற்கு பொறுப்பு யார் என்பதை முடிவு செய்ய வேண்டும்’’ என்றார்.

Related Stories: