நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள் காரணமாக இன்றே கடைவீதிகளில் குவியும் மக்கள்

ஈரோடு: கொரோனாவை கட்டுப்படுத்துவதற்கான புதிய கட்டுப்பாடுகள் நாளை முதல் கடுமையாக்கப்பட்டுள்ளன. ஏற்கனவே இரவு நேர ஊரடங்கு, ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கு அமலில் இருக்கக்கூடிய சூழ்நிலையில் புதிய கட்டுப்பாடுகளாக நாளை பலசரக்கு கடை மற்றும் காய்கறி கடைகளை தவிர ஏனைய கடைகளை திறப்பதற்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.

அதேபோன்று காய்கறி கடைகள் மற்றும் பலசரக்கு கடைகள் கூட மதியம் 12 மணி வரை மட்டுமே திறந்திருக்க அனுமதிக்கப்பட்டுள்ளது. உணவகங்களுக்கு பார்சல் மட்டுமே வழங்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. குறிப்பாக ஈரோட்டை பொறுத்தவரை ஜவுளி வர்த்தகம் நிறைந்த பகுதி. நாளை முதல் இங்கு சுமார் 20,000 க்கும் மேற்பட்ட ஜவுளி நிறுவனங்கள் அடைக்கப்படும் என வணிகர்கள் தெரிவித்துள்ளனர்.

அனைத்து வணிகர்கள் மற்றும் தொழில் கூட்டமைப்பினரும் அனைத்து கடைகளையும் அடைத்து அரசின் உத்தரவிற்கு ஒத்துழைப்பு தருவதாக தெரிவித்துள்ளனர். நாளை முதல் இந்த கடைகள் அடைக்கப்பட கூடிய காரணத்தினால் இன்றே பொருட்களை வாங்குவதற்கு அதிகப்படியானோர் கடைவீதிகளில் குவிந்து வருகின்றனர். ஈரோடு நகரில் உள்ள கடைவீதிகளில் இயல்பு நிலையை விட சற்று கூட்டம் அதிகமாகவே காணப்படுகிறது.

Related Stories:

>