ஆந்திராவில் முழு ஊரடங்கு: கிருஷ்ணகிரி எல்லையில் போக்குவரத்து நிறுத்தம்

கிருஷ்ணகிரி: ஆந்திராவில் முழு ஊரடங்கு காரணமாக கிருஷ்ணகிரி மாவட்ட எல்லையில் போக்குவரத்து நிறுத்தப்பட்டுள்ளது. இந்தியாவில் கொaரோனாவின் 2வதுஅலை வேகமாக பரவி வருகிறது. தினமும் 3 லட்சத்திற்கும் அதிகமானோர் பாதிப்பிற்குள்ளாகி வருகின்றனர். தினசரி பலி எண்ணிக்கையும் 3 ஆயிரத்திற்கும் அதிகமாக உள்ளது. கொரோனா தடுப்பு நடவடிக்கையாக பல மாநிலங்களில் முழு ஊரடங்கு மற்றும் இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு வருகிறது.

ஆந்திராவிலும் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. இதையடுத்து கொரோனா தொற்று பரவலை தடுக்கும் வகையில் இன்று பகல் 12 மணி முதல் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இதனால் கிருஷ்ணகிரியில் இருந்து காளிக்கோவில் வழியாக ஆந்திர மாநிலம் குப்பத்திற்கு செல்லும் சாலையில் போக்குவரத்து முற்றிலும் நிறுத்தப்பட்டுள்ளது.

தினமும் ஆந்திராவில் இருந்தும் தமிழகத்தில் இருந்தும் ஏராளமான அரசு பேருந்துகள், தனியார் பேருந்துகள், சரக்கு வாகனங்கள் சென்று வந்த இந்த சாலையில் தற்போது ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டதால் முற்றிலும் போக்குவரத்து தடைபட்டுள்ளது. தமிழகத்தில் இருந்து ஆத்திராவிற்குள் எந்த வாகனங்களையும் அனுமதிப்பதில்லை. ஆனால் ஆந்திராவில் இருந்து தமிழகத்திற்கு நடந்து வருபவர்களை மட்டும் அனுமதிக்கின்றனர். இதனால் சிலர் நடந்தே தமிழகத்திற்கு வந்து கொண்டிருக்கின்றனர். தமிழகத்தில் இருந்து செல்லும் வாகனங்களும், கிருஷ்ணகிரி மாவட்ட எல்லையான காளிக்கோவில் என்ற இடத்திலேயே போலீசார் மற்றும் வனத்துறையினர் திருப்பி அனுப்பிவிடுகின்றனர்.

Related Stories: