கோவையில் ஆக்சிஜன் தட்டுப்பாடு!: அவசரமற்ற அறுவை சிகிச்சைகளை தள்ளி போட மருத்துவமனைகள் முடிவு..!!

கோவை: கோவையில் ஆக்சிஜன் தட்டுப்பாடு காரணமாக அவசரமில்லாத அறுவை சிகிச்சைகளை தள்ளி வைக்க மருத்துவமனைகள் முடிவு செய்துள்ளன. தமிழகத்தில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. தினசரி பாதிப்பு என்பதும் உயர்ந்துக்கொண்டே செல்கின்றது. ஆக்சிஜன் பற்றாக்குறையால் மருத்துவமனைகள் திணறி வருகின்றன. பல இடங்களில் ஆம்புலன்சுகளில் வைத்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகின்றது. இந்நிலையில், அவசரமற்ற அறுவை சிகிச்சைகளை தள்ளி போட கோவை மருத்துவமனைகள் முடிவு செய்துள்ளன. கோவையில் உள்ள அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் கொரோனா வார்டுகள் நிரம்பி வழிகின்றன. 

இதனால் ஆக்சிஜன் தேவை அதிகரித்துள்ளது. ஆக்சிஜன் உற்பத்தி செய்யும் நிறுவனங்களுக்கும் தொழில் நிறுவனங்களுக்கும் தர வேண்டிய ஆக்சிஜனை நிறுத்திவிட்டு மருத்துவமனைகளுக்கு தருகின்றன. இந்நிலையில் போதுமான அளவு ஆக்சிஜன் இல்லாததால் கொரோனா தவிர மற்ற நோயாளிகளுக்கு செய்ய வேண்டிய அறுவை சிகிச்சைகள் உள்ளிட்டவை செய்ய முடியாமல் உள்ளன. 

அவசரமாக மேற்கொள்ள வேண்டிய அறுவை சிகிச்சைக்கு தேவையான ஆக்சிஜன் மட்டும் கிடைப்பதால் பெரும்பாலான மருத்துவமனைகள் அவசரமற்ற அறுவை சிகிச்சைகளை தள்ளி போட முடிவு செய்துள்ளன. அறுவை சிகிச்சைக்கு போதுமான அளவில் ஆக்சிஜன் தர கோரிக்கை விடுத்திருக்கின்ற மருத்துவர்கள், கொரோனா கட்டுப்பாட்டை மக்கள் கடைபிடிக்க வேண்டும் எனவும் வலியுறுத்தியுள்ளனர்.

Related Stories:

>