தமிழக முதல்வராக நாளை மறுநாள் காலை 9 மணிக்கு பதவியேற்கிறார் மு.க.ஸ்டாலின்; அழைப்பு விடுத்த ஆளுநர்..! எளிய முறையில் பதவியேற்பு விழா

சென்னை: தமிழக முதல்வராக நாளை மறுநாள் காலை 9 மணிக்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பதவி ஏற்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. சென்னை கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகையில் பதவி ஏற்பு விழா நடைபெறுகிறது. பதவி ஏற்பு விழாவில் குறைந்த அளவு நபர்களுக்கு மட்டுமே அனுமதி. மிழகத்தில் நடந்து முடிந்த சட்டமன்ற பொதுத்தேர்தலில் திமுக மட்டும் 125 இடங்களில் வெற்றி பெற்று தனி மெஜாரிட்டியுடன் ஆட்சி அமைக்க உள்ளது. திமுக கூட்டணி 159 இடங்களில் வெற்றி பெற்றது. இதையடுத்து, தமிழகத்தின் புதிய முதல்வராக மு.க.ஸ்டாலின் நாளை மறுதினம் காலை 9 மணிக்கு பதவியேற்க உள்ளார்.

முன்னதாக திமுக சட்டமன்ற குழு தலைவரை தேர்ந்தெடுப்பதற்கான கூட்டம் நேற்று மாலை சென்னை, அண்ணா அறிவாலயத்தில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் திமுக எம்எல்ஏக்கள் 125 பேரும், திமுக சின்னமான உதயசூரியனில் போட்டியிட்டு வெற்றிபெற்ற மதிமுக எம்எல்ஏக்கள் 4 பேர், மனிதநேய மக்கள் கட்சி எம்எல்ஏக்கள் 2 பேர், கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி எம்எல்ஏ ஒருவர், தமிழ்நாடு வாழ்வுரிமை கட்சி ஒன்று என மொத்தம் 133 எம்எல்ஏக்கள் பங்கேற்றனர். இந்த கூட்டத்தில் திமுக சட்டமன்ற குழு தலைவராக மு.க.ஸ்டாலினை திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் முன்மொழிந்தார்.

அதை அனைத்து திமுக எம்எல்ஏக்களும் ஒருமனதாக ஏற்றுக் கொண்டு, கைத்தட்டி தங்கள் வரவேற்பை தெரிவித்தனர். இதையடுத்து, திமுக சட்டமன்ற குழு தலைவராக மு.க.ஸ்டாலின் ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டதற்கான கடிதத்தில் அனைத்து எம்எல்ஏக்களும் கையெழுத்திட்டனர். திமுக சட்டமன்ற குழு தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டதை தொடர்ந்து மு.க.ஸ்டாலின் இன்று காலை 10.30 மணிக்கு சென்னை, கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகைக்கு சென்று தமிழக கவர்னர் பன்வாரிலால் புரோகித்தை சந்தித்தார். அப்போது, திமுக சட்டமன்ற உறுப்பினர்களின் ஆதரவு கடிதத்தை கவர்னரிடம் மு.க.ஸ்டாலின் வழங்கி, தனது தலைமையில் ஆட்சி அமைக்க உரிமை கோரினார்.

ஆட்சி அமைக்க உரிமை கோரியதை தொடர்ந்து, தமிழக கவர்னர் பன்வாரிலால் புரோகித் மு.க.ஸ்டாலின் தலைமையில் ஆட்சி அமைக்க அழைப்பு விடுத்தார். ஆளுநரின் அழைப்பு கடிதத்தை அவரது செயலாளர் அனந்தராம் பட்டேல் மு.க.ஸ்டாலினிடம் வழங்கினார். நாளை மறுநாள் ஸ்டாலின் ஆளுநர் மாளிகையில் பதவியேற்கவுள்ள நிலையில் 20 நிமிடம் அதுகுறித்து பேசப்பட்டது. இந்நிலையில் தமிழக முதல்வராக நாளை மறுநாள் காலை 9 மணிக்கு பதவியேற்கிறார் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின். தமிழ்நாடு அமைச்சரவை பதிவியேற்பு விழா என்ற அழைப்பிதழுடன் அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதன் மூலம் ஸ்டாலின் மற்றும் அவரது அமைச்சரவை நாளைமறுநாள் பதவியேற்கவுள்ளனர்.

தமிழகத்தில் தற்போது கொரோனா தொற்று பரவல் உள்ள நிலையில், முதல்வராக மு.க.ஸ்டாலின் பதவியேற்கும் விழா நாளை மறுதினம் காலை 9 மணிக்கு சென்னை, ஆளுநர் மாளிகையில் எளிமையான முறையில் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. திமுக எம்எல்ஏக்கள், குறிப்பிட்ட சில ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகள் உள்ளிட்ட ஒரு சிலருக்கு மட்டுமே பதவியேற்பு விழாவில் பங்கேற்க அழைப்பு விடுக்கப்பட உள்ளது.

அதேபோன்று அமைச்சர்களாக பதவியேற்க உள்ளவர்களின் குடும்ப உறுப்பினர்கள் ஒரு சிலர் மட்டுமே வர அனுமதிக்கப்படுவார்கள். பதவியேற்பு விழாவுக்கான அனைத்து ஏற்பாடுகளையும் தமிழக தலைமை செயலாளர் ராஜீவ் ரஞ்சன், கவர்னரின் தனி செயலாளர் ஆனந்தராவ் பாட்டீல், தமிழக டிஜிபி திரிபாதி, தமிழக சட்டப்பேரவை செயலாளர் சீனிவாசன் ஆகியோர் செய்து வருகிறார்கள். ஆளுநர் மாளிகையில் உள்ள ஊழியர்கள், விழாவில் பங்கேற்பவர்கள் மற்றும் பத்திரிகையாளர்கள் உள்ளிட்டவர்களுக்கு இன்று கொரோனா பரிசோதனையும் செய்யப்பட்டுள்ளது.

Related Stories: