தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையில் கண்காணிப்புக் குழு ஆய்வு

தூத்துக்குடி: தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையில் ஆட்சியர் தலைமையிலான 7 பேர் கொண்ட கண்காணிப்பு குழு ஆய்வு மேற்கொண்டு வருகிறது. தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையில் ஆக்சிஜன் உற்பத்தி செய்வதற்கு உச்சநீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது. கொரோனா 2வது அலை வேகமாக பரவி வரும் சூழ்நிலையில் உயிரிழப்புகள் அதிகரித்து வருவதால் பல இடங்களில் ஆக்சிஜன் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதால் ஸ்டெர்லைட் ஆலை திறப்பு குறித்து உச்சநீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டது.

இந்த வழக்கில் ஆக்சிஜன் உற்பத்தி செய்து மக்களுக்கு இலவசமாக கொடுக்கப்படும் என்று ஆலை தரப்பில் உச்சநீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது. இதனையடுத்து ஸ்டெர்லைட் ஆலையை திறக்க உச்சநீதிமன்றம் அனுமதி கொடுத்தது. இதனையடுத்து தமிழகத்தில் அனைத்து கட்சி கூட்டத்தில் ஆக்சிஜன் உற்பத்திக்காக ஸ்டெர்லைட் ஆலையை 4 மாதங்களுக்கு திறக்க முடிவு செய்யப்பட்டது.

இதனையடுத்து ஸ்டெர்லைட் ஆலை தரப்பில் கூடிய விரைவில் மின் இணைப்பு வழங்கப்படும் என கூறப்பட்டிருந்தது. இந்த நிலையில் இன்று தூத்துக்குடி ஆட்சியர் செந்தில்ராஜ் தலைமையில் 7 பேர் கொண்ட குழுவினர் ஆலையை ஆய்வு செய்தனர். இந்த ஆய்வுக்கு பிறகு மின் இணைப்பு கொடுக்கப்பட்டு இந்த ஆலை ஆக்சிஜன் உற்பத்திக்கு மட்டும் செயல்படும் என கூறப்படுகிறது.

Related Stories: