எந்த முகாந்திரமும் இல்லை: மராத்தா சமூகத்தினருக்கான இடஒதுக்கீட்டை ரத்து செய்து உச்சநீதிமன்றம் உத்தரவு

டெல்லி: மராத்தா சமூகத்தினருக்கான இடஒதுக்கீட்டை ரத்து செய்து உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. 2018-ம் ஆண்டு மராட்டியத்தில் மராத்தா சமூகத்தினருக்கு 16 சதவீத இடஒதுக்கீடு வழங்க சட்டம் நிறைவேற்றப்பட்டது. மராத்தா சமூகத்தினருக்கு கல்வி, வேலை வாய்ப்பில் இடஒதுக்கீடு வழங்கியதை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இடஒதுக்கீடு தர வேண்டிய அளவு கல்வியிலோ, சமூகத்திலோ மராத்தா சமூகத்தினர் பின்தங்கி இல்லை என்று உச்சநீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது. வழக்கை விசாரித்த 5 நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வு மராத்தா இடஒதுக்கீட்டை ரத்து செய்து தீர்ப்பளித்துள்ளது.  

50 சதவீத இடஒதுக்கீட்டு உச்சவரம்பை எட்டியுள்ள நிலையில், கூடுதல் ஒதுக்கீடு வழங்குவதை எதிர்த்து, உச்ச நீதிமன்றத்தில் வழக்குகள் தொடரப்பட்டுள்ளன. இந்த வழக்கை உச்ச நீதிமன்ற அரசியல் சாசன அமர்வு விசாரித்தது. இந்த வழக்கில் இன்று தீர்ப்பளித்த உச்ச நீதிமன்றம், மராத்தா சமூகத்தினருக்கான இட ஒதுக்கீட்டை ரத்து செய்துள்ளது. மராத்தா சமூகத்திற்கு அதிக இட ஒதுக்கீடு வழங்குவதற்கு எந்த முகாந்திரமும் இல்லை எனக்கூறிய உச்ச நீதிமன்றம், பாராளுமன்றத்தில் மேற்கொள்ளப்பட்டுள்ள சட்ட திருத்தத்தின் படி, சமூக பொருளாதார பின் தங்கி பிரிவில் எந்த ஒரு சாதியையும் மாநில அரசுகள் இணைக்க முடியாது எனவும் மாநில அரசுகள் அடையாளம் கண்டு மத்திய அரசுக்கு பரிந்துரை மட்டுமே செய்ய முடியும் எனவும் உச்ச நீதிமன்றம் கூறியது. 

Related Stories: