இலங்கை கடற்படை அத்துமீறல்: பாம்பன் மீனவர்கள் 86 பேர் சிறைபிடிப்பு: கொரோனா பீதியால் நடுக்கடலிலேயே விடுவிப்பு

ராமேஸ்வரம்: தமிழக கடல் பகுதியில் கடந்த ஏப். 15 முதல் மீன்பிடி தடைகாலம் அமலில் உள்ளது. இதனால் 8 ஆயிரத்திற்கும் மேற்பட்ட விசைப்படகுகள் கரை நிறுத்தம் செய்யப்பட்டுள்ளன. நாட்டுப்படகுகளில் வழக்கம்போல் மீனவர்கள் மீன்பிடித்து வருகின்றனர். பாம்பன் வடக்கு கடற்கரை பகுதியில் இருந்து நேற்று பாக் ஜலசந்தி கடலில் மீனவர்கள் மீன்பிடிக்க சென்றனர். அப்போது ரோந்து வந்த இலங்கை கடற்படையினர் 11 நாட்டுப்படகுகளை சிறைபிடித்தனர். படகுகளில் 86 மீனவர்கள் இருந்தனர். இவர்களை நடுக்கடலிலேயே வைத்து விசாரணை செய்த கடற்படையினர் இந்திய கடலோர காவல்படைக்கு தகவல் தெரிவித்தனர். 11 நாட்டுப்படகுகளின் பதிவு எண், பிடிபட்ட மீனவர்களின் பெயர்கள் உள்ளிட்ட விபரங்களை தெரிவித்து நடவடிக்கை எடுக்க வலியுறுத்தினர்.

இலங்கை கடற்படை உயர் அதிகாரிகளின் உத்தரவை தொடர்ந்து, 86 மீனவர்களும் யாழ்ப்பாணம் இந்திய தூதரக அதிகாரிகள் மற்றும் இந்திய கடலோர காவல்படையினரிடம் நடுக்கடலிலேயே படகுகளுடன் ஒப்படைக்கப்பட்டனர். இதை தொடர்ந்து நேற்றிரவு இந்திய கடலோர காவல்படையினரின் பாதுகாப்புடன் 86 மீனவர்களும் ராமேஸ்வரத்திற்கு அழைத்து வரப்பட்டனர்.இலங்கை கடற்படை தமிழக மீனவர்களை கைது செய்து தங்கள் நாட்டிற்கு அழைத்துச் செல்வதுதான் வழக்கம். ஆனால் கொரோனா பீதி காரணமாக தமிழக மீனவர்களை கைது செய்யும் நடவடிக்கையை இலங்கை கடற்படையினர் தவிர்த்து வருகின்றனர். இதனால் நேற்று பிடிபட்ட பாம்பன் நாட்டுப்படகு மீனவர்களை கைது செய்யாமல் எச்சரித்து இந்திய தூதரக அதிகாரிகளிடம் ஒப்படைத்துள்ளனர்.

Related Stories: