திண்டிவனம் அருகே சாலையில் கவிழ்ந்த டேங்கர் லாரி!: குடம், குடமாக பாமாயிலை பிடித்து சென்ற மக்கள்..!!

விழுப்புரம்: திண்டிவனம் அருகே சாலையில் கவிழ்ந்த பாமாயில் லாரியில் இருந்து கொட்டிய பாமாயிலை அப்பகுதி மக்கள் குடங்களில் பிடித்து சென்றனர். விழுப்புரத்தில் உள்ள தனியார் நிறுவனத்திற்காக  சென்னையில் இருந்து 20 டன் பாமாயிலை ஏற்றிக்கொண்டு டேங்கர் லாரி ஒன்று சென்று கொண்டிருந்தது. லாரி திண்டிவனத்தை அடுத்த ஜக்காம்பேட்டை பகுதியில் சென்று கொண்டிருந்த போது ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையோர தடுப்புக்கட்டையில் மோதி கவிழ்ந்தது. 

இதில் லாரியின் டேங்கரில் இருந்த 20,000 லிட்டர் பாமாயில் சாலையில் கொட்டியது. இதனை அறிந்த அப்பகுதி மக்கள் பாமாயிலை குடம் குடமாக பிடித்து சென்றார்கள். தகவல் அறிந்து அங்கு சென்ற மயிலம் போலீசார், தொழிற்சாலைக்கு எடுத்து செல்லப்படும் இந்த பாமாயிலை கொண்டு சமையல் செய்ய முடியாது என்று தெரிவித்தார்கள். 

ஆனாலும் அதனை பொருட்படுத்தாத மக்கள், தொடர்ந்து பல்வேறு பாத்திரங்களில் எண்ணெய்யை எடுத்து சென்றனர். இதையடுத்து பாலத்தின் கீழே தேங்கி நின்ற பாமாயிலில் தீயணைப்புத் துறையினர், தண்ணீர் கலந்தனர். இந்த விபத்தால் திண்டிவனம் நெடுஞ்சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.  

Related Stories:

>