மனிதர்களின் எதிர்ப்பு சக்தியை கொல்ல கூடிய மதுவிற்பனையை அனுமதிப்பது ஏன்?: மத்திய, மாநில அரசுகள் பதில் தர ஐகோர்ட் கிளை ஆணை..!!

மதுரை: கொரோனா பரவல் காரணமாக தமிழகத்தில் டாஸ்மாக் கடைகளை மூட கோரிய வழக்கில் மத்திய, மாநில அரசுகள் பதில் தர ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தின் கொரோனா நோய் தொற்றின் 2ம் அலை மிக தீவிரமாக பரவி வருகிறது. நாளொன்றுக்கு 20 ஆயிரத்திற்கும் அதிகமானோர் பாதிப்படைந்து வருகின்றனர். 100க்கும் மேற்பட்ட இறப்புகள் பதிவு செய்யப்பட்டு வருகின்றது. கொரோனா பரவலின் தாக்கத்தை குறைக்க தமிழக அரசு பல்வேறு கட்ட நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன. இரவு நேர ஊரடங்கு, ஞாயிற்றுக்கிழமை முழு நேர ஊரடங்கு உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டுள்ளது. 

கடைகளை திறப்பதற்கும் பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. ஆனால் இதுவரை மதுபான கடைகளை மூடுவது சம்பந்தமாக தமிழக அரசானது எந்த அறிவிப்பையும் வெளியிடவில்லை. இதனை எதிர்த்து திருச்செந்தூரை சேர்ந்த ராம்குமார் ஆதித்யன் என்பவர் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் பொதுநல வழக்கு ஒன்றினை தொடர்ந்திருந்தார். மனுவில், கொரோனா 2ம் அலை தீவிரமாக பரவி வரும் நிலையில், பொது கூட்டங்களுக்கு தடை விதிக்கப்பட்ட போதும் மதுக்கடையை மூடவில்லை என்று குற்றசாட்டியிருந்தார். இந்த மனு நீதிபதிகள் ரமேஷ், புகழேந்தி ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. 

அச்சமயம், கொரோனா தொற்றில் இருந்து மனிதர்களை பாதுகாப்பதற்கு நோய் எதிர்ப்பு சக்தி அதிகம் தேவைப்படுகிறது என்று அரசானது கூறி வருகிறது. அவ்வாறு இருக்கும் பட்சத்தில் மனிதர்களின் எதிர்ப்பு சக்தியை கொல்ல கூடிய மதுபானங்களை இன்னும் விற்பனை செய்ய அனுமதிப்பது ஏன்? என்று கேள்வி எழுப்பினர். தொடர்ந்து, மதுபான கடைகள் மூடுவது குறித்து என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்பது தொடர்பாக மத்திய, மாநில அரசுகள் விரிவான பதில் தர உத்தரவிட்டு வழக்கு விசாரணையை 2 வாரங்களுக்கு ஒத்திவைத்தனர். 

இதனிடையே நாளை முதல் தமிழகத்தில் மதுக்கடைகள் செயல்படும் நேரத்தை குறைக்க அரசு திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தற்போது டாஸ்மாக் மதுக்கடைகள் பகல் 12 மணிக்கு தொடங்கி இரவு 9 மணி வரை திறந்திருக்கின்றன. தற்போதைய நேரத்துக்கு பதில் இனி காலை 8 மணி முதல் பகல் 12 மணி வரை மட்டுமே கடைகளை திறக்க அரசு திட்டமிட்டுள்ளது. தற்போது செயல்படும் 9 மணி நேரத்துக்கு பதில் 4 மணி நேரம் வரை மட்டுமே கடைகளை திறப்பது குறித்து ஆலோசனை நடத்தப்பட்டு வருகிறது.

Related Stories: