கள்ளச்சந்தையில் ரெம்டெசிவிர் மருந்து விற்ற டாக்டர், மருந்தாளுநர் கைது

சென்னை: கொரோனா நோய் பரவலை தடுக்கும் ரெம்டெசிவிர் மருந்து கள்ளச்சந்தையில் விற்பனை செய்யப்படுவதாக தமிழக குடிமைப் பொருள் வழங்கல் பிரிவு சிஐடி போலீசாருக்கு  புகார்கள் வந்தன. இதையடுத்து  இன்ஸ்பெக்டர்  தன்ராஜ் தலைமையிலான  போலீசார், கிண்டி பகுதியில் திடீரென வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது, அவ்வழியாக வந்த காரை மடக்கி சோதனையிட்டனர். காரில் இருந்தவர் சென்னை கீழ்ப்பாக்கம் பகுதியை சேர்ந்த டாக்டர்  ராமசுந்தரம்(25) என தெரியவந்தது.

இவர், கிண்டியில் உள்ள அரசு கொரோனா மருத்துவமனையில் பணியாற்றி வருகிறார். இவரது காரை சோதனை செய்ததில் கொரோனா நோய்க்கு பயன்படுத்தும் 12  ரெம்டெசிவிர் மருந்து குப்பிகள் ஒருபெட்டியில் இருப்பது தெரியவந்தது. விசாரணையில்,  மருந்தாளுநராக வேலை பார்க்கும் சைதாப்பேட்டையை  சேர்ந்த கார்த்திக்(28) என்பவர் இந்த மருந்துகளை திருடிவந்து தன்னிடம் கொடுத்து ஒரு மருந்திற்கு  ₹5 ஆயிரம் பெற்றுச் சென்றதாகவும்  கூறினார். மேலும், 12 மருந்து  குப்பிகளை டாக்டரிடம் கொடுப்பதற்காக பைக்கில் வந்த கார்த்திக்கை கையும் களவுமாக போலீசார் கைது செய்தனர்.

தொடர்ந்து கார்த்திக்கிடம் போலீசார் நடத்திய விசாரணையில், என்னிடம் ₹5 ஆயிரத்துக்கு வாங்கும் டாக்டர்,  அதை அவசர தேவை உள்ளவர்களுக்கு ₹20 ஆயிரம் வரை விற்பதாக கூறியதாக தெரிகிறது. இதனையடுத்து குடிமைப் பொருள் வழங்கல் துறை சிஐடி போலீசார் ராமசுந்தரம்  மற்றும் கார்த்திக் ஆகிய இருவரையும் கைது செய்து  கிண்டி காவல்  நிலைய  போலீசாரிடம் ஒப்படைத்தனர்.

Related Stories:

>