சேலம் நெடுஞ்சாலைநகர் வீட்டில் எடப்பாடி பழனிசாமியுடன் அதிமுக நிர்வாகிகள் சந்திப்பு

சேலம்: தமிழக சட்டமன்ற தேர்தலில் அதிமுக தோல்வியை சந்தித்து ஆட்சியை இழந்துள்ளது. அதிமுகவின் முதல்வர் வேட்பாளராக களம் இறங்கிய கட்சியின் இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி, சேலம்  நெடுஞ்சாலைநகரில் உள்ள தனது வீட்டில் தங்கியுள்ளார். அவரை கட்சி முன்னாள் அமைச்சர்கள், முன்னணி நிர்வாகிகள், தற்போது வெற்றிபெற்ற எம்எல்ஏக்கள் சந்தித்து வருகின்றனர்.  நேற்று 2வது நாளாக எடப்பாடி பழனிசாமியை, முன்னாள் அமைச்சர்கள் ஆர்.பி.உதயகுமார், வளர்மதி மற்றும் தேர்தலில் வெற்றி பெற்ற மதுரை மேலூர் செல்வம், உசிலம்பட்டி ஐயப்பன், கீழ்பெண்ணாத்தூர் அரங்கநாதன், சிவகங்கை  செந்தில்நாதன் ஆகியோர் சந்தித்து வாழ்த்து பெற்றனர். முன்னாள் அமைச்சர்கள் பாஸ்கரன், ராமச்சந்திரன், வேடசந்தூர் முன்னாள் எம்எல்ஏ பரமசிவம், சேலம் வீரபாண்டி முன்னாள் எம்எல்ஏ மனோன்மணி உள்ளிட்டோரும் சந்தித்தனர்.

 எதிர்க்கட்சி தலைவராக எடப்பாடி பழனிசாமியை தேர்வு செய்ய கொங்கு மண்டலத்திலிருந்து வெற்றி பெற்ற அதிமுக எம்எல்ஏக்கள் ஆதரவு உள்ளது. மற்ற பகுதிகளிலிருந்து வெற்றி பெற்ற எம்எல்ஏக்களின் ஆதரவும் அவருக்கே இருப்பதாக  முன்னாள் அமைச்சர்கள், நிர்வாகிகள் தெரிவித்து வருகின்றனர். இதனால், வரும் 7ம் தேதி நடக்கும் அதிமுக எம்எல்ஏக்கள் கூட்டத்தில், சட்டமன்ற குழு தலைவராக எடப்பாடி பழனிசாமி தேர்வு செய்யப்படுவார் எனக் கூறப்படுகிறது.

Related Stories: