5 மாநில தேர்தல் முடிந்த நிலையில் பெட்ரோல், டீசல் விலை அதிகரிப்பு: நாடு முழுவதும் முறையே 11, 16 காசு உயர்வு

சேலம்: தேர்தல் முடிந்த நிலையில் பெட்ரோல், டீசல் விலை நேற்றைய தினம் உயர்த்தப்பட்டது. முறையே 11, 16 காசுகள் அதிகரிக்கப்பட்டதால், சென்னையில் ₹92.54, ₹85.91 என விற்பனை செய்யப்பட்டது.  சர்வதேச சந்தையின் கச்சா எண்ணெய் விலை, இறக்குமதி செலவு, அமெரிக்க டாலருக்கு நிகராக இந்திய ரூபாயின் மதிப்பு ஆகியவற்றை கணக்கில் கொண்டு பெட்ரோல், டீசல் விலை தினமும் மாற்றி அமைக்கப்பட்டு வருகிறது. தமிழ்நாடு,  கேரளா, அசாம், மேற்குவங்கம் உள்ளிட்ட 5 மாநில தேர்தல் வந்ததால், மார்ச், ஏப்ரல் மாதத்தில் விலையை ஏற்றாமல், நிலையாக வைத்துக் கொண்டனர். இடையில் 6 நாட்கள் மட்டும் மிக சிறிய அளவு விலையை குறைத்தனர். கடைசியாக  கடந்த ஏப்ரல் 15ம் தேதி பெட்ரோல் 15 காசும், டீசல் 13 காசும் குறைக்கப்பட்டது. இதன்பின், பழையபடி ஒரே நிலையில் விலையை வைத்துக் கொண்டனர்.

 இந்நிலையில் 18 நாட்களுக்கு பின் நேற்று, நாடு முழுவதும் பெட்ரோல் 11 காசும், டீசல் 16 காசும் அதிகரிக்கப்பட்டது. இதனால், சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் ₹92.43ல் இருந்து 11 காசு உயர்ந்து ₹92.54க்கும், டீசல் ₹85.75ல் இருந்து 16  காசு உயர்ந்து ₹85.91க்கும் விற்பனை செய்யப்பட்டது. இதுவே, சேலத்தில் பெட்ரோல் விலை ₹92.97க்கும், டீசல் விலை ₹86.35க்கும் விற்பனையானது. 5மாநில தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்ட நிலையில், பெட்ரோல், டீசல் விலையை எண்ணெய் நிறுவனங்கள் உயர்த்தியுள்ளது. வரும் நாட்களில் இன்னும் விலை ஏற்றம் பெறும் என அஞ்சப்படுகிறது.

Related Stories: