வாழ்வென்பது பெருங்கனவு!

நன்றி குங்குமம் தோழி

Advertising
Advertising

கண்ட கனவுகளும் நிஜமாகியவையும்...

நம்முடைய லட்சியக் கனவுகளை நிறைவேற்றிக்கொள்ள விரும்புவோமானால், முதலில் நாம் செய்யவேண்டியது விழித்துக்கொள்ள வேண்டும். பிறகு நம்முடைய கனவு நிறைவேறும்வரை தொடர்ந்து முயற்சி செய்துகொண்டே இருக்க வேண்டும். ஒவ்வொரு செயலை செய்யும்போதும் கட்டாயம் நம்மிடத்தில் ஒரு  ‘திசைகாட்டி’  இருக்க வேண்டும்.

ஏனென்றால், செல்லும் திசை தெரியாமல் இருந்தால் வேறு எங்கேயாவது முட்டிக்கொண்டு நிற்க வேண்டிய நிலைமை வந்துவிடும். நம்முடைய திறமையின் அளவை கட்டாயம் தெரிந்துகொள்ள வேண்டும். ஆனால் அதற்குமேலும் செல்லும் முயற்சியை எப்போதும் நிறுத்திவிடக்கூடாது என்று சொல்லும் தொழில்முனைவோர் சுதா செல்வக்குமார் தனது வாழ்வின் பெருங்கனவை நம்முடன் பகிர்ந்து கொண்டார்.

‘‘என்னுடைய சொந்த ஊர் கோயில் நகரம் என்று பெருமையாக அழைக்கப்படும் கும்பகோணம். கல்லூரி படிக்கும் காலங்களில் பொழுதுபோகவில்லை என கற்றுக்கொண்ட கலை இப்போது பொழுதே போதவில்லையே எனச் சொல்லும் அளவிற்கு என்னை வளர்த்துவிட்டுள்ளது. என் படிப்புக்கும் வேலைக்கும் சம்பந்தமில்லை.  

வணிகவியல் பட்டதாரியான நான்,  ஆசிரியர் வேலைக்குச் செல்ல வேண்டும் என அம்மா ஆசைப்பட, வங்கி பணிகளுக்கான தேர்வுகளை எழுதச் சொல்லி அப்பா வற்புறுத்த, எனக்கோ கலை தொடர்பான பணிகளில் ஈடுபடுவதிலேயே ஆர்வம் இருந்தது. என்னுடைய நெருங்கிய தோழி ஆசிரியையாக பணிபுரிந்தாள்.

அவள் என்றாவது அவளுடைய ட்யூஷன் வகுப்புகளை என்னை நடத்துமாறு கேட்டுக்கொள்ளும் நாட்களில், நான் முயன்றும் முடியாமல், இன்று ட்யூஷன் விடுமுறை என்று போர்டு எழுதி போட்டுவிடுவேனே தவிர, ஒருமுறை கூட அவளுக்காக வகுப்பு எடுத்ததில்லை.  ஆனால், கலை தொடர்பான வகுப்புகளை இன்று மிகுந்த ஆர்வத்துடன் எடுக்கிறேன்.

பள்ளி, கல்லூரிகளில் நடக்கும் சிறப்பு வகுப்புகளுக்கும், மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கும், நானே நடத்தும் கிராஃப்ட் இன்ஸ்டிடியூட்டிலும், குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை சொல்லித் தருகிறேன். என் அம்மாவை பொறுத்தவரை நான் பொறுமை அற்றவள். ஆனால் கலை மற்றும் அது தொடர்பான வகுப்புகள் எடுக்க மிகவும் பொறுமை அவசியம். அதுவுமே சலிப்பில்லாமல் ரசித்து செய்யும்போது மட்டுமே சாத்தியம்.

 

ஆடிட்டராக வேண்டும் என்பதே கனவாக இருந்தது. தற்செயலாக, பொழுது போக்காக கற்றுக்கொண்டதுதான் கைவினைப் பயிற்சி. தொடர் செயல்பாட்டின் பலனாக, ‘மகளிர் தொழில் முனைவோர்’ விருதும் பிரபல நிறுவனத்தின் சிறப்பு பயிற்சியாளர் அந்தஸ்தும் கிடைத்தது.  இது போன்ற அங்கீகாரங்கள் எனது பொறுப்பை அதிகரித்தன.

மதுபானி ஓவியம், பட்டச்சித்ரா, வார்லி, தஞ்சை ஓவியம் உட்பட பலவித ஓவியங்கள், ம்யூரல், ஆரத்தித்தட்டு அலங்காரம், மெழுகு உருவங்கள், களிமண் உருவங்கள், சணல் அலங்காரம், நகை வடிவமைத்தல், மெகந்தி, மினியேட்சர் போன்ற பல்வேறு கலைகளை கற்றுக்கொண்டேன்.  இன்னும் புதிய கலைகளை கற்றுக்கொண்டும் இருக்கிறேன்.  

இந்தத் துறைக்கு எல்லை என்பதில்லை.  இவற்றை ஒவ்வொன்றும் வேறு வேறு ஊர்களில், வேறு வேறு ஆசிரியர்களிடம் கற்றுக்கொண்டேன். அதனாலேயே எல்லா கைவினைகளையும் ஒரே இடத்தில் சொல்லித்தர வேண்டும் என முடிவெடுத்தேன். அப்படி ஆரம்பிக்கப்பட்டதுதான் என்னுடைய கலைக்கூடம்.

என்னிடம் உள்ள சிறப்பு பத்து ரூபாய் முதல் பத்தாயிரம் ரூபாய் வரை கைவினை பரிசுப் பொருட்கள் இருப்பதுதான். நவராத்திரி, முகூர்த்த நாட்களில் ஆர்டர் அதிகமாகும். முன்பு நிறைய செய்து வைத்திருப்பேன். இப்போது ஆர்டரின் பேரில் செய்து தருகிறேன். டிஸைன் ஒரே மாதிரி இல்லாமல் சிறுசிறு வித்தியாசம் கற்பனைக்கு ஏற்ப செய்து தருவது அதிக வரவேற்பை பெற்றுத்தருகிறது.

கல்யாணம் ஆன புதிதில் என் கணவரின் அலுவலகத்தில் பணிபுரிந்தேன், அதனால் ஒரு வருடம் கலைப்பொருட்கள் செய்யும் பக்கமே போகலை. இயந்திரத்தனமான வாழ்க்கை. எதையோ மிஸ் செய்வது மாதிரியான  உணர்வு. வேலையை விட்டு விட்டேன். ஒரு நாள் கைவினை பொருட்கள் விற்கும் கடையில் பொருட்கள் வாங்கச் சென்றபோது அங்கு என் குரு வசந்தா விஜயராகவன் அவர்களைப் பார்த்தேன்.

அப்போது அவர் எல்லா தொலைக்காட்சி, பத்திரிகைகளிலும் சமையல் மற்றும் கைவினைப் பொருட்கள் செய்து காட்டுவார். இப்போது காலமாகி விட்டார். அவரிடம் ஆலோசனை கேட்டேன். உடனே பிரபல பத்திரிகைக்கு போன் செய்தார். அப்போது தான் பெண்கள் பத்திரிகை பரவலாக வெளிவர ஆரம்பித்த நேரம். அந்தப் பத்திரிகையிலிருந்து என்னை பேட்டி எடுக்க வீட்டிற்கே வந்துவிட்டனர்.

அதைப் பார்த்து பிரபல தொலைக்காட்சியில் என் பேட்டியும், கைவினைப் பொருட்கள் செய்முறையும் ஒலிபரப்பானது. அதைப் பார்த்தவர்கள் அக்கலை வேலையைச் சொல்லித்தர சொல்லி கேட்டனர். வகுப்புகளில் நிறைய பேர் சேர்ந்தனர்.  ஒரே பாட்டுல நம்ம சூப்பர் ஸ்டார் பெரிய ஆளா ஆகிவிடுற மாதிரி என் நல்ல நேரம் பல தரப்பிலிருந்தும் வாய்ப்புகள் வந்தன.

காற்றுள்ள போதே தூற்றிக்கொள் என்பதை வேதவாக்காக எடுத்துக்கொண்டு செயல்பட ஆரம்பித்தேன். என் கணவர் மிகவும் உறுதுணையாக இருந்தார். சின்னச் சின்ன தவறுகளைக் கண்டுபிடித்து திருத்தங்கள் செய்து தருவார். நெட்ல பார்த்து ஐடியா கொடுப்பார். யூ டியூப் சொந்த சேனலில் என் கைவேலைப்பாடு, சமையல் வீடியோவை அப்லோடு செய்ய சொல்வார்.

எனக்கு ஒரு ஆண், பெண் குழந்தை. 15 வருடத்திற்கு மேல் கைவேலைப்பாடு செய்தாலும், கடந்த 5 வருடங்களாக  பல வித சமையல் செய்வதிலும் ஆர்வம் காட்டி வருகிறேன். கைவேலையோடு சேர்ந்து சமையலும் பல பத்திரிகை, தொைலக்காட்சிக்கு செய்து காண்பிப்பதோடு வகுப்புகளும் எடுக்கிறேன்.

கை வேலைப்பாடு, சமையல் நிகழ்ச்சிக்கு நடுவராக சென்று வருகிறேன். வி.ஐ.பி வீடுகளில் என் பெயிண்டிங் மற்றும் கலைப்பொருட்கள் அலங்கரிப்பது எனக்குப் பெருமையே. எதுவுமே அனுபவம் தாண்டி எத்தனை வருடம் செய்கிறோம் என்பது முக்கியமில்லை.. எப்படி ஈடுபாட்டுடன் திருத்தமாக செய்கிறோம் என்பதே முக்கியம்.. இதைக் கடைப்பிடித்து மனதிற்கு பிடித்த வேலையைச் செய்தால் வாழ்க்கையில் மகிழ்ச்சியே’’ என நிறைவாக முடித்தார்.

- சுதா செல்வக்குமார்

தொகுப்பு: தோ.திருத்துவராஜ்

Related Stories: