×

குறுந்தொழில்களால் உலகையே உற்றுப்பார்க்க வைக்கும் மதுரை

காலம் கடந்து நிற்கிற கலைக் கட்டடங்களும், நம் கலாச்சார அடையாளங்களாய் நிலைத்து நிற்பவை மட்டும் பழமையல்ல. ஒவ்வொருவரின் ‘லட்சணமாய்’ மதிக்கப்பட்டு அடுத்தடுத்த தலைமுறைக்கும் தொட்டுத்தொடர்கிற தொழிலும் அந்நகர் மக்களின் பழமை காட்டும் ஒரு பண்பாட்டு அடையாளம் தான். மதுரை நகரில் பத்தாயிரத்திற்கும் அதிகம்பேர் தகரப் பொருட்கள் தயாரிக்கும் பட்டறைத் தொழிலில் இருக்கிறார்கள். இன்னும் ஜெய்ஹிந்த்புரம், சோலை அழகுபுரம், சிந்தாமணி, அனுப்பானடி, வில்லாபுரம், மகால் பகுதிகள், செல்லூர், மகபூப்பாளையம் என நகரின் அனைத்து பகுதிகளிலும் எண்ணிட முடியாத அளவிற்கு ஏகப்பட்ட தொழிற்கூடங்களால் நிரம்பி வழிகிறது.

எவர்சில்வர் பட்டறைகள், ஸ்டீல், மர பர்னிச்சர் தயாரிப்புகள், அப்பளக் கம்பெனிகள், நெசவகங்கள், போல்டு நட்டுகள், ரப்பர் பொருட்கள், மினி வேன், லாரிகளுக்கு பாடி கட்டுதல், ஸ்டவ் அடுப்புகள் தயாரிப்பு, மோட்டார் வாகன ஸ்பேர்பார்ட்ஸ், நிக்கல், குரோமியக்கம்பெனிகள், செருப்பு மற்றும் பிளாஸ்டிக் தயாரிப்புகள், ஊதுபத்தி, சிலேட்டுக்குச்சி என நூற்றுக்கும் மேற்பட்ட தொழில்களுடன் ஆயிரக்கணக்கான சிறுகுறு தொழில்நிறுவனங்கள் உள்ளன. பெரிய கம்பெனிகளுக்கான இயந்திர உதிரி பாகங்கள் வழங்கும் சிறிய லேத்களும் நகரில் பெருகி இருக்கிறது. பத்தடி நீள அகல இடத்தில் நான்கு பேர் மட்டுமே வேலை பார்க்கும் விதம் இந்த மினி தொழிற்சாலைகள் மிகப்பெரிய உற்பத்தி புரட்சி செய்து வருகின்றன.

மதுரை நகருக்குள் தயாராகும் பல்வேறு படைப்புகளுக்கு தமிழகம் கடந்து வெளிமாநிலங்கள், வெளிநாடுகளில் வரவேற்பு இருக்கிறது. சிறு முதலீட்டில் தொழில் வாய்ப்பு, சுலபமாக வேலைக்கு ஆட்கள் கிடைப்பது, மூலப்பொருட்கள் கொண்டு வர, உற்பத்தி பொருட்கள் கொண்டு சேர்க்க வசதி என பல்வேறு நிலைகளில் இத்தொழில் இந்நகரில் வளம் கண்டு வருகிறது. இந்த ‘குட்டித் தொழில்களை’ நம்பியே மதுரையில் மட்டும் நேரடியாக, மறைமுகமாக 3 லட்சத்திற்கு மேற்பட்ட குடும்பங்கள் உள்ளன. குறுந்தொழில்களால் உலகையே உற்றுப்பார்க்க வைக்கும் வலிமையுடன், பல்வேறு திறன்களில் இவர்கள் மேம்பட்டு நிற்கின்றனர்.

பழங்கால ‘வணிக நகரம்’ தெரியுமா?
ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள கீழக்கரையை பழங்காலத்தில் வணிக நகரம் என்றனர். ‘கிழக்குக் கரை பட்டினம்’ என்பது மருவி கீழக்கரை ஆனதென்கின்றனர். வடகரை, தென்கரை, பெருங்கரை, மடக்கரை என்ற தமிழ்நாட்டு சிற்றூர்களை போன்று இந்த ஊரின் பெயரும் ‘கரை’ விகுதியில் இருக்கிறது. இவ்வூரின் உண்மை பெயரை அறுதியிட இயலவில்லை. எனினும் இங்குள்ள 17ம் நூற்றாண்டு கல்வெட்டின்படி இவ்வூர் ‘நினைத்ததை முடித்த விஜயன்பட்டினம்’ என்றும், ‘அறுந்தொகை மங்கலம்’ என்றும் பெயர் பெற்றிருந்ததாக தெரிகிறது. வகுதை, தென்காயல் என்பனவும் இவ்வூருக்கான இலக்கிய பெயர்களாகும். 16வது நூற்றாண்டிற்கு முன்னதாக உள்ள நிகழ்ச்சிகளுடன் இணைக்கத்தக்க வரலாற்று சான்று எதுவும் இங்கு இதுவரை கிடைக்கவில்லை.

ராமநாதபுரம் திருமலை சேதுபதி மன்னர் வழங்கிய செப்பேடு ஒன்றிலிருந்து, இந்த பட்டினத்து பேட்டையில் முத்து, நெல், நவ தானியங்கள், பாக்கு, மிளகு, செம்பு, துத்தநாகம், பட்டுப்புடவை, பன்னீர், ஏலம், கிராம்பு, சாதிக்காய், பட்டு நூல், கருப்புக்கட்டி, புளி, தேங்காய், பலசரக்கு பொருட்களில் சிறப்பான வியாபாரம் நடந்தது தெரிகிறது. இதன் காரணமாக பல நாட்டாரும் இங்கு வந்து வசித்திருந்ததை இங்குள்ள ‘பன்னாட்டார் தெரு’ நினைவூட்டுகிறது. சோனகர்கள் எனும் இஸ்லாமியர்கள் வணிகத்தில் முன்னணியில் இருந்தனர். போர்த்துக்கீசியர், டச்சுக்காரர்கள் அக்காலத்தில் இவ்வூரில் அமைத்த பண்டக சாலைகளும் இவ்வூர் வணிகத்தை அடையாளம் காட்டி நிற்கிறது.


Tags : Madurai , Madurai is a place where the world is enthralled by small businesses
× RELATED மதுரையில் தொடர்மழை கிட்டங்கியில் உள்ள நெல்லை பாதுகாக்க அரசு நடவடிக்கை