×

அவனை நினைவுப்படுத்தும் சேலை!

நன்றி குங்குமம் தோழி

செய்தியில் ஒரு பெண் பாலியல் சீண்டலுக்கு உள்ளானதை பார்த்ததுமே, நம் சமூகம் “அச்சச்சோ! பாவம்” என ஒரு நிமிடம் அனுதாபம் காட்டிவிட்டு, மறுநொடி, “ஆனா அந்த பொண்ணு என்ன ட்ரெஸ் போட்டிருந்துச்சு? எங்க போயிருந்துச்சு?” போன்ற கேள்விகளை சர்வ சாதாரணமாக கேட்டுவிட்டு நகர்ந்து போகிறது. அந்த பெண் அந்த நேரம், அந்த உடை அணிந்து அங்கு போகாமல் இருந்திருந்தால் இந்த பிரச்சனையே வந்திருக்காது என்று பாதிக்கப்பட்டவரையே சாடும் பழக்கம்தான் இன்றும் வழக்கத்தில் இருந்து வருகிறது.

குற்றம் நிரூபிக்கப்பட்டாலும், அவன் மேல தப்புதான், ஆனா அந்த பொண்ண மட்டும் ஏன் ரேப் பண்ணணும், அப்படி என்ன செய்தாள் என்ற தொணியில்தான் நம் குடும்பங்களில் உரையாடல்கள் நிகழ்கின்றன. குற்றம் செய்தவரை விடுத்து, பாதிக்கப்பட்டவரை குற்றவாளி கூண்டில் நிறுத்தி கேள்விகள் கேட்கும் கலாச்சாரம்தான் இன்று இருக்கிறது.

பெல்ஜியம் நாட்டின் தலைநகரம் பிரஸல்ஸில், “What were you wearing” என்ற கண்காட்சி நடந்தது, அதில் 18 உடைகள் மக்கள் பார்வைக்காக வைக்கப்பட்டிருந்தன. அந்த உடைகள் அனைத்துமே பாலியல் துன்புறுத்தலின் போது பாதிக்கப்பட்டவர்கள் அணிந்திருந்த ஆடைகள். இதில், 6 வயது குழந்தையின் கவுன் முதல், பெண் ராணுவ அதிகாரியின் சீருடை வரை இடம்பெற்றிருந்தது.

அந்த கண்காட்சியில் ஆண் ஒருவரின் ஆடையும் இடம்பெற்றிருப்பது குறிப்பிடத்தக்கது. அவர் பாலியல் வன்முறைக்கு உள்ளானதை நண்பர்கள் ஏற்காததும், தனக்கு நிகழ்ந்தது தவறுதான் என உணரவே சில நாட்கள் ஆனதாகவும் அவர் தெரிவித்துள்ளார். பெண் ராணுவ வீரர், தன் கையில் துப்பாக்கியிருந்துமே பாதுகாத்துக்கொள்ள முடியவில்லை என கூறியுள்ளார்.

இதில் பல பேர், பல வருடம் பழகிய நண்பர், உறவினர் மூலமாகத்தான் இந்த கொடுமையை அனுபவித்துள்ளனர். இந்தியர்கள் பாதுகாப்பானது என கருதும் சேலையும் இடம் பெற்றிருந்தது நம்மை வியக்க வைத்தது. அதில் இருந்த வாசகம் “எப்பவும் போல நான் தினமும் உடுத்தும் சேலையைத்தான் அணிந்திருந்தேன்.

அது என் நாட்டையும், என் குடும்பத்தையும், என் கலாச்சாரத்தையும் நினைவுப்படுத்தியது. ஆனால் இப்போது, அவனைத்தான் (குற்றவாளி) நினைவு
படுத்துகிறது” என்று எழுதியிருந்தது. இதில் நிறைந்திருக்கும் உடைகள் அனைத்துமே, சாதாரணமாக அங்கு வாழும் மக்கள் தினமும் அணியும் உடைதான். ஏன், பார்வையாளர்களில் பலரும் கூட அதே மாதிரியான உடைகளையே உடுத்தியிருந்தனர்.

இந்த கண்காட்சியின் நோக்கம் அது தான். பாலியல் வன்முறைக்கும், உடைக்கும் எந்த சம்மந்தமும் இல்லை. அதை தவறாக பார்க்கும் கண்களில் தான் உள்ளது. பெண்ணுடல் மீது நடக்கும் வன்முறை போதாதென, அவளை பாதுகாக்க வேண்டிய சமூகமும் மேலும் மன உளைச்சலுக்கு ஆளாக்குகிறது.
பாலியல் வன்முறைக்கு எதிராக போராடாமல், இன்னும் பாதிக்கப்பட்டவர்கள் மீது தவறுகளை  சுட்டிக்காட்டி விவாதிக்கும் நிலைமையில்தான் நாம் வாழ்ந்து கொண்டு இருக்கிறோம்.

நீதிமன்றத்தில் நிறுத்தி, அங்கேயும் இது போல கேள்விகள் கேட்கப்படுவது எவ்வளவு அபத்தமானது என்பதை வலியுறுத்தவே இந்த கண்காட்சி அமைக்கப்பட்டுள்ளது. ஆணுக்கு ஒரு சட்டம், பெண்ணுக்கு ஒரு சட்டம். ஆணுக்கு ஏற்றது போல்தான் பெண்ணின் உடை, பேச்சு, நடவடிக்கை எல்லாம் இருக்க வேண்டும். ஆனால் ஆண் எப்படி வேண்டுமானாலும் இருக்கலாம் என்பது பால்நிலை வன்முறையே ஆகும்.  எதோ சமூக சேவை செய்து, குற்றம் செய்தவருக்கு தக்க தண்டனை கொடுத்தது போல பேசும் ஆண்களும், ஏன் பெண்களும் கூட இருக்கத்தான் செய்கின்றனர்.

மாற வேண்டியது பெண்களின் உடை அல்ல, உள்ளங்கள்தான். இந்த கண்காட்சி, பாலியல் வன்முறைக்கு காரணம் உடைதான் என்ற கருத்தை உடைக்குமளவு சக்திவாய்ந்த செய்தியை மக்களிடம் கொண்டு சேர்த்துள்ளது.
    
- ஸ்வேதா கண்ணன்

Tags :
× RELATED பூஜைப் பொருட்கள் தயாரிப்பிலும் லாபம் பார்க்கலாம்!