தி மோஸ்ட் வான்டட் லீடர்...

நன்றி குங்குமம் தோழி  

டி.ஜே.வாக இருந்து பிரதமராகிய ஜெசிண்டா ஆர்டர்ன்

கனடா நாட்டின் பிரதமர் ஜஸ்டின் ட்ரூடுவை அடுத்து, மக்களால் அதிகம் கொண்டாடப்படும் தலைவர், நியூசிலாந்து பிரதமர் ஜெசிண்டா ஆர்டர்ன்.

38 வயதே நிரம்பிய ஜெசிண்டாதான் அந்நாட்டில் 150 வருடங்களாக இல்லாத இளம் பெண் தலைவர்.

நியூசிலாந்தில் கிறிஸ்ட் சர்ச் என்ற நகரில், அல் நூர் மசூதி மற்றும் டீன்ஸ் ஏவ் ஆகிய இரண்டு மசூதிகளிலும் நடந்த பயங்கரமான துப்பாக்கிச் சூடு சம்பவத்தால், கடந்த மார்ச் மாதம் 15-ம் தேதி 50 பேர் உயிரிழந்துள்ளனர். இந்தச் சம்பவம் உலக மக்களையே அதிர வைத்த போது, அந்நாட்டின் தலைவி ஜெசிண்டா ஆர்டர்ன் இதை எதிர்கொண்டு அணுகிய விதம் அனைவரையும் நெகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

ஜெசிண்டா, தன் நாட்டு மக்களின் உண்மையான தலைவராகவும், நிலைமையை பொறுமையாக கையாண்டு, அக்கறையுடன் திறமையாக மக்களை வழிநடத்தி உலக மக்களால் இன்று கொண்டாடப்படுகிறார். அன்பும் பரிவும்தான் உண்மையான தலைமையின் அடித்தளம். வீர வசனம் பேசி பழிவாங்கும் எண்ணங்களை தூண்டாமல், மசூதியில் நடந்த துப்பாக்கி சுடுதல் போன்ற பயங்கரம் வேறெங்கும் நடக்காமல் தடுக்க, நியூசிலாந்தின் துப்பாக்கி உரிமம் சட்டத்தில் கண்டிப்பாக மாற்றம் கொண்டுவரப்படும் என உறுதியளித்து, தன் நாட்டில் வாழும் இஸ்லாமிய குடிமக்களுக்கு பாதுகாப்பான உணர்வை உறுதி செய்யும் வகையில், இஸ்லாமிய பெண்கள் அணியும் ஹிஜாபை தலையில் அணிந்து இறுதிச்

சடங்கிற்கு வந்து மக்களை சந்தித்தார்.  

அங்கு பாதிக்கப்பட்ட குடும்பத்தினரை சந்திக்கும் போது, பரிவோடு அவர்களை கட்டியணைத்து ஆறுதல் கூறி, இறுதிச்சடங்கிற்கான செலவு களையும், குடும்பத்தினருக்கான பண உதவியும் உடனே செய்தார். இதன் மூலம் சிறந்த ஆளுமையும், தலைமைப் பண்புகள் கொண்டு நல்லதொரு எதிர்காலத்திற்கான நம்பிக்கையை உலக மக்கள் மத்தியில் விதைத்துள்ளார்.

தாக்குதலுக்கு பின் நடந்த பாராளுமன்ற கூட்டத்தில் பேசிய ஜெசிண்டா, “அவன் ஒரு தீவிரவாதி. அவன் ஒரு பயங்கரவாதி. அவ்வளவுதான். அவனுடைய பெயரைக்கூட நான் உச்சரிக்கப்போவது இல்லை. நியூசிலாந்தில் அவனுடைய பெயரைக்கூட நாங்கள் அங்கீகரிக்க போவதில்லை” என்று

கூறினார்.

படிக்கும் போதே “டி.ஜே”வாக இருந்து, நியூசிலாந்தின் லேபர் கட்சியின் முன்னாள் தலைவர் ஹெலென் க்லர்கிடம் 17 வயதில் பணிக்கு சேர்ந்து, பின் Tony Blair அலுவலகத்தில் பணியாற்ற லண்டன் சென்றார். 2008 ஆம் ஆண்டில், நியூசிலாந்தின் 28 வயதே நிரம்பிய முதல் பாராளுமன்ற உறுப்பினராகவும் பொறுப்பேற்றார்.

பெனாசீர் பூட்டோவிற்கு அடுத்து, ஆட்சிக் காலத்தில் இருக்கும் போதே, குழந்தையை பெற்றெடுத்த முதல் தலைவர் என்ற பெருமையும் இவரையே சேரும். பிரதமர் பதவியை ஏற்ற சில மாதங்களிலேயே கர்ப்பமடைந்து, பெண் குழந்தையை பெற்றெடுத்து மீண்டும் பணிக்கு திரும்பினார்.   

ஐநா சபை பொதுக்குழு கூட்டத்திற்கு, தன் மூன்று மாத கைக்குழந்தையுடன் வந்தவர், “இந்த சந்திப்பில் வெறும் 5% பெண் தலைவர்கள் மட்டும்தான் இருக்கிறோம்.

இது மாற வேண்டும். எனக்கு ஐ.நாவும் முக்கியம், என் குழந்தையும் முக்கியம். அதனால்தான் குழந்தையோடு வந்தேன்’’ எனக் கூறினார்.

‘‘இங்கு பல பெண்கள் குடும்பமா? வேலையா? என்ற இரண்டில் ஏதாவதொன்றை விட்டுக்கொடுக்கும் நிலை இருந்து வருகிறது. இரண்டும் முக்கியம்தான். குடும்பம், வேலை இரண்டையும் சரிசமமாக சமாளிக்க, இந்த சமூகமும், குடும்பமும்தான் பெண்களுக்கு உதவ வேண்டும்.

நம் பணி இடமும் “சைல்ட் ஃப்ரெண்ட்லியாக” இருந்து, குடும்பத்தினரும் வீட்டுச் சுமைகளையும் பகிர்ந்து கவனிக்க வேண்டும். இந்த நிலை கூடிய விரைவில் மாறும்’’ என்றும் நம்பிக்கை தெரிவித்தார்.  LGBT Pride Paradeல் பங்கெடுத்த முதல் பிரதமர் என்ற பெருமையும் இவரிடம் தான் உள்ளது.

தன் தேவாலயம் LGBTக்கு எதிர்மறையாக கொள்கைகள் கொண்டுள்ளது என்பதற்காக, தேவாலயத்திலிருந்து தன்னை விலக்கிக்கொண்டார்.

ஜெசிண்டாவைப் போலவே அவரின் பூனை Paddle-ம் மக்களை கவர்ந்தது. தன் பூனைக்கு என தனியாக சமூக வலையில் பக்கம் உருவாக்கி, அதில் அதன் படங்களையும் சுட்டித்தனத்தையும் பதிவேற்றி வந்தார். ஆனால் பேடில்ஸ் கார் மோதி இறந்து போனது. இருந்தாலும், பூனையின் நினைவாக, சமூகவலைத்தளங்களில் பேடில்ஸின் பக்கம் இன்றும் செயல்பட்டு வருகிறது.

டைம்ஸ் பத்திரிகை வெளியிட்ட, உலகிலேயே செல்வாக்கு மிக்க டாப் 100 நபர்களில், ஜெசிண்டா ஆர்டர்ன், அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், இங்கிலாந்து இளவரசர் ஹேரி, இளவரசி மேகன் மார்க்கில் ஆகியோரின் வரிசையில் இடம் பிடித்துள்ளார். துப்பாக்கிச் சுடுதலையடுத்து, ஜெசிண்டாவின் ஆளுமையைப் பாராட்டி போற்றும் விதமாக, ஐக்கிய அரபு அரசாங்கம், துபாயிலுள்ள உலகிலேயே உயரமான கட்டிடமான ‘புர்ஜ் கலிஃபா’வில் ஜெசிண்டாவின் புகைப்படத்தை தோற்றுவித்து கவுரவித்தது.

தலைமை பொறுப்பில் இருக்கும் அதிகாரிகள், நாட்டு மக்கள் அனைவரையும் இனம், மொழி, மதம், பாலினம் என எந்தபாகுபாடும் இல்லாமல் சமத்துவமாக உரிமைகள் வழங்கி வழிநடத்த வேண்டும் என்பதற்கு ஜெசிண்டா ஆர்டர்ன்தான் தற்கால தலைவர்களுக்கு முன்மாதிரி.

ஸ்வேதா கண்ணன்

Related Stories: