கொரோனா தடுப்பூசி தொடர்பான அவதூறு வழக்கு: முன்ஜாமின் கோரி மீண்டும் சென்னை உயர்நீதிமன்றத்தில் மன்சூர் அலிகான் மனுத்தாக்கல்..!

சென்னை: கொரோனா தடுப்பூசி தொடர்பான அவதூறு வழக்கில் முன்ஜாமின் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் மன்சூர் அலிகான் மனுத்தாக்கல் செய்துள்ளார். கொரோனா தடுப்பூசி பற்றி அவதூறாக பேசியதாக தொடரப்பட்டு உள்ள வழக்கை ரத்து செய்ய கோரியும் மன்சூர் அலிகான் மனுத்தாக்கல் செய்துள்ளார். இந்த வழக்கு விரைவில் விசாரணைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. தமிழகம் முழுவதும் கொரோனா பரவலை தடுக்க 45 வயதிற்கு அதிகமானோருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது. இதனிடையே சமீபத்தில் நடிகர் விவேக் மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்தார். இதனைத்தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய மன்சூர் அலிகான் கொரோனா தடுப்பூசி குறித்தும் சில கருத்துகளை தெரிவித்தார்.

அவரின் கருத்துகள் சர்ச்சையை ஏற்படுத்தியநிலையில் சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் அளித்த புகாரின் பேரில் மன்சூர் அலிகான் மீது வடபழனி போலீசார் வழக்கு பதிவு செய்தனர். இதையடுத்து, சென்னை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் முன் ஜாமீன் கேட்டு தாக்கல் செய்த மனுவில், கொரோனா தடுப்பூசி செலுத்துவதை கட்டாயப்படுத்தக் கூடாது என்றுதான் கூறினேனே தவிர, தடுப்பூசி குறித்து தவறாக எதுவும் தெரிவிக்கவில்லை என குறிப்பிட்டிருந்தார். இந்த மனு முதன்மை நீதிமன்ற நீதிபதி ஆர்.செல்வகுமார் முன்பு விசாரணைக்கு வந்தபோது, காவல்துறை தரப்பில் ஆஜரான நகர அரசு குற்றவியல் வழக்கறிஞர் ஜெய்சங்கர், பொதுமக்கள் மத்தியில் தேவையற்ற அச்சத்தை ஏற்படுத்தும் வகையில் செயல்பட்டுள்ளதால் முன்ஜாமீன் வழங்கக்கூடாது என ஆட்சேபம் தெரிவித்தார்.

இதையடுத்து, மன்சூர் அலிகானின் முன்ஜாமீன் மனுவில் முதல் தகவல் அறிக்கை குறித்த விவரங்கள் தெளிவாக குறிப்பிடவில்லை எனக் கூறி, புதிய மனுவை தாக்கல் செய்ய உத்தரவிட்டு முன்ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்து நீதிபதி உத்தரவிட்டார். இந்நிலையில், முன் ஜாமீன் கோரி நடிகர் மன்சூர் அலிகான் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார். சென்னை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றம்  முன்ஜாமீன் வழங்க மறுத்த நிலையில், முன் ஜாமீன் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் நடிகர் மன்சூர் அலிகான் மனு  தாக்கல் செய்துள்ளார்.

Related Stories: