×

ஆக்சிஜன் தட்டுப்பாடு அதிகரித்துள்ள நிலையில் ஆக்சிஜன் உற்பத்தியாளர்களுடன் பிரதமர் மோடி ஆலோசனை

டெல்லி: ஆக்சிஜன் தட்டுப்பாடு அதிகரித்துள்ள நிலையில் ஆக்சிஜன் உற்பத்தியாளர்களுடன் பிரதமர் நரேந்திர மோடி ஆலோசனை நடத்தினார். கொரோனா இரண்டாவது அலை நாடு முழுவதும் அதிதீவிரமாக பரவி வருகிறது. இதையடுத்து ஆக்சிஜன் தட்டுப்பாடு கடுமையாக அதிகரித்துள்ளது. ஆக்சிஜன் கிடைக்காமல் உயிரிழப்புகள் நாள்தோறும் பன்மடங்கு உயர்ந்து வருகிறது.

இதையடுத்து தட்டுப்பாட்டை போக்குவது தொடர்பாக ஆக்சிஜன் உற்பத்தி நிறுவன உரிமையாளர்களுடன் பிரதமர் நரேந்திர மோடி ஆலோசனை மேற்கொண்டார். காணொலி காட்சி மூலம் நடைபெற்ற இந்த ஆலோசனையில் ஆக்சிஜன் தட்டுப்பாட்டை போக்குவது குறித்தும் நாடு முழுவதும் தட்டுப்பாடின்றி விநியோகிப்பது குறித்தும் ஆலோசிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.

இந்தியாவின் ஆக்சிஜன் தட்டுப்பாடு பற்றிய வழக்கில் மத்திய அரசை நீதிமன்றம் கடுமையாககண்டித்துள்ளது. டெல்லியில் புகழ்பெற்ற கங்காராம் மருத்துவமனையில் ஆக்சிஜன் இல்லாமல் கொரோனா நோயாளிகள் இறந்துகொண்டிருக்கிறார்கள். உத்தரப் பிரதேசத்தில் தனிநபர்கள் ஆக்சிஜன் சிலிண்டர் வாங்குவதற்கு ஏகப்பட்ட கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. மூச்சுத் திணறும் தங்கள் உறவினர்களுக்காக ஆக்சிஜன் வாங்க முடியாமல் பலர் தவிக்கிறார்கள். மகாராஷ்டிராவில் ஆக்சிஜன் குளறுபடியால் நோயாளிகள் பலர் இறந்துள்ளார்கள். மத்தியப் பிரதேசத்தில் ஆக்சிஜன் சிலிண்டர்களைக் கும்பலாகச் சேர்ந்து கொள்ளையிடும் சம்பவங்கள் நடக்கின்றன.

Tags : Modi , Modi, Oxygen shortage
× RELATED பிரதமர் மோடி அறிவுறுத்தல்...