மங்களூரு அருகே கப்பல் மோதியதில் தமிழக மீனவர்கள் மாயம்!: கடற்படை உதவியுடன் தேடுதல் நடத்த கமல்ஹாசன் கோரிக்கை..!!

சென்னை: கர்நாடகாவில் சிங்கப்பூர் கப்பல் மோதியதில் காணாமல் போன மீனவர்களை கடற்படை உதவியுடன் கண்டுபிடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் வலியுறுத்தியிருக்கிறார். கடந்த 13ம் தேதி மங்களூரு அருகே மீன்பிடிக்க சென்றுக் கொண்டிருந்த தமிழக மீனவர்களின் படகின் மீது சிங்கப்பூரை சேர்ந்த லீ ஹாப்ரே என்ற கப்பல் மோதியதில் படகு மூழ்கியதை தன்னுடைய அறிக்கையில் கமல்ஹாசன் சுட்டிக்காட்டியிருக்கிறார். இந்த விபத்தில் குமரி மாவட்ட மீனவர்கள் இருவர் உயிரிழந்திருப்பதாகவும், 6 தமிழக மீனவர்கள் காணாமல் போனதற்கும் அதிவேகமாக சென்ற சிங்கப்பூர் கப்பல் தான் பொறுப்பு என கமல்ஹாசன் கூறியிருக்கிறார்.

கடலில் பயணம் செய்யும்போது விதிமுறைகள் மீறி அதிவேகத்தில் சென்றதால் ஏற்பட்ட உயிரிழப்பை சாதாரண விபத்தாக எண்ணிவிட முடியாது. கடல் பகுதிகளில் பயணிக்கும் கப்பல்களில் வேகம் குறித்துக் கண்காணிக்கப்படுவது அவசியம் என்பது இந்த விபத்தின் மூலம் உறுதியாகியுள்ளது. இந்த விவகாரத்தில் பாதிக்கப்பட்ட குளச்சல் மீனவர்களின் குடும்பத்தினருக்கு கப்பல் நிறுவனத்திடம் இருந்து நிவாரணம் பெற்றுத் தர தமிழக அரசு மத்திய, மாநில அரசுகளை வலியுறுத்த வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார். மேலும் கடற்படை உதவியுடன் காணாமல் போன மீனவர்களை கண்டுபிடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கமல்ஹாசன் கோரிக்கைவிடுத்திருக்கிறார். பேரிடர் காலங்களில் தொடர்புக்கொள்ள ஏதுவாக தமிழக மீனவர்களின் படகுகளில் உயர் தொழில்நுட்ப படகுகளை பொறுத்த வேண்டும் என்றும் தமிழக அரசை கமல்ஹாசன் கேட்டுக் கொண்டுள்ளார்.

Related Stories: