தமிழகத்தில் கொரோனா பாதிப்பு இரட்டிப்பாகும் வேகம் அதிகரிப்பு!: 2 மாதத்தில் 10 லட்சம் பேர் பாதிக்கப்பட வாய்ப்பு..மருத்துவ நிபுணர்கள் எச்சரிக்கை..!!

சென்னை: தமிழகத்தில் 10 லட்சம் கொரோனா பாதிப்புகள் ஏற்பட 1 ஆண்டு ஆன நிலையில், தற்போதைய சூழலில் இரண்டே மாதத்தில் 10 லட்சம் பேர் பாதிக்கப்பட வாய்ப்புள்ளதாக மருத்துவ நிபுணர்கள்  எச்சரிக்கைவிடுத்துள்ளனர். தமிழகத்தில் கொரோனா பாதிப்பு இரட்டிப்பாகும் வேகம் அதிகரித்து வரும் நிலையில் அதனை கட்டுப்படுத்துவது குறித்து தொற்று நோய் நிபுணர்களுடன் அரசு ஆலோசனை மேற்கொண்டு வருகிறது. கடந்த மார்ச் 11 முதல் 17ம் தேதி வரையிலான ஒரு வாரத்தில் 780 கொரோனா பாதிப்புகள் பதிவானது. அடுத்தடுத்த வாரங்களில் ஆயிரம், இரண்டாயிரம், மூன்றாயிரத்தை தாண்டிய தொற்று பாதிப்பு, திடீரென ஏப்ரல் 8 முதல் 14ம் தேதி வரையிலான ஒரே வாரத்தில், 6 ஆயிரத்தை தாண்டியது.

கடந்த ஒரு வாரத்தில் மட்டும் 10 ஆயிரம் பாதிப்புகளை தாண்டியது மேலும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதேநிலை நீடித்தால் இரண்டே மாதத்தில் கொரோனா பாதிப்பு 10 லட்சத்தை தாண்டும் என மருத்துவ நிபுணர்கள் கூறுகின்றனர். தமிழகத்தில் முதல் அலை கொரோனா பரவலில் 10 லட்சம் பாதிப்புகள் ஏற்பட ஓராண்டு ஆனது. ஆனால் நாட்டில் 10 லட்சம் பேரில் 1 லட்சத்து 96 ஆயிரம் பேருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்படும் நிலையில், தமிழகத்தில் அந்த எண்ணிக்கை 2 லட்சத்து 45 ஆயிரத்து 870 ஆக உள்ளது. நாட்டில் 1 லட்சத்து 96 ஆயிரத்து 415 பேருக்கு சோதனை செய்யப்பட்டுள்ளது.

இருப்பினும் தமிழகத்தில் சோதனைகள் குறைவாக உள்ள 18 மாவட்டங்களில் கொரோனா சோதனைகளை அதிகரிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. தொடர்புகளை கண்டறிந்து சோதனை செய்வதில் தருமபுரி, சேலம், திருப்பத்தூர், விருதுநகர், திருச்சி உள்ளிட்ட மாவட்டங்கள் பின்தங்கியுள்ளதாகவும் மருத்துவ நிபுணர்கள் கூறுகின்றனர். இதனிடையே தமிழகத்தில் கொரோனா தடுப்பூசி தட்டுப்பாடு காரணமாக 2வது டோஸ் தடுப்பூசி போட்டுக்கொள்ள வந்தவர்கள் ஏமாற்றத்துடன் திரும்பி செல்லும் நிலை உள்ளது. பெரும்பாலான ஊரக பகுதிகளில் முதல் டோஸ் தடுப்பூசிக்கே கடும் தட்டுப்பாடு நிலவி வருகிறது.

Related Stories: