தமிழக சட்டமன்ற தேர்தலில் பதிவான வாக்குகள் மே 2ம் தேதி காலை 8 மணிக்கு எண்ணப்படும்: தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு

சென்னை: தமிழக சட்டமன்ற தேர்தலில் பதிவான வாக்குகள் மே 2ம் தேதி காலை 8 மணிக்கு எண்ணப்படும் என தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு தெரிவித்துள்ளார். தமிழகத்தில் மொத்தமுள்ள 234 சட்டசபை தொகுதிகளிலும் நேற்று ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற்றது. அதேபோன்று கன்னியாகுமரி மக்களவை தொகுதிக்கும் இடைத்தேர்தல் நடைபெற்றது. 234 தொகுதிகளில் திமுக கூட்டணி, அதிமுக கூட்டணி, அமமுக, மநீம, நாம் தமிழர் கட்சி மற்றும் சுயேச்சை வேட்பாளர்கள் என மொத்தம் 3,998 பேர் போட்டியிட்டனர். தமிழகத்தில் மொத்தமுள்ள 88,937 வாக்குப்பதிவு மையங்களிலும் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் மூலமே வாக்குப்பதிவு நடைபெற்றது.

வாக்குப்பதிவு முடிந்ததும், மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்துக்கு அரசியல் கட்சி ஏஜென்டுகள் முன்னிலையில் சீல் வைக்கப்பட்டது. பின்னர் துணை ராணுவ வீரர்கள் பாதுகாப்புடன் வாகனங்களில் ஏற்றி வாக்கு எண்ணும் மையங்களுக்கு கொண்டு செல்லப்பட்டது. அங்கு தயாராக இருந்த ஸ்டாங் ரூமில் வாக்குப்பதிவு இயந்திரங்கள் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் மட்டும் 75 வாக்கு எண்ணும் மையங்கள் உள்ளது. அங்கு பலத்த பாதுகாப்புடன் வாக்கு எண்ணும் இயந்திரங்கள் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் வாக்கு எண்ணிக்கை வரும் மே 2ம் தேதி நடைபெற உள்ளது. இந்நிலையில் தமிழக தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது; வாக்கு எண்ணிக்கைக்கான மேசைகளை குறைப்பது குறித்து எந்த முடிவும் எடுக்கவில்லை.

வாக்கு என்னும் அறை சிறியதாக இருந்தால் 2 அறைகளில் எண்ணிக்கை நடைபெறும். ஒரு அறைக்கு 7 மேஜைகள் என்று 14 மேஜைகளில் வாக்கு எண்ணிக்கை நடைபெறும் முகவர்களுக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்வது குறித்து சுகாதாரத்துறை அதிகாரிகளுடன் ஆலோசித்து முடிவு எடுக்கப்படும். 72 மணி நேரத்துக்கு முன் கொரோனா பரிசோதனை செய்யப்பட வேண்டும் என்பதால் விரைவில் அறிவிக்கப்படும். அனைத்து தொகுதிகளிலும் மே 2-ம் தேதி காலை 8 மணிக்கு வாக்கு எண்ணிக்கை தொடங்கும். காலை 8 மணிக்கு தபால் வாக்குகளும், 8.30 மணிக்கு இயந்திரத்தில் பதிவான வாக்குகளும் எண்ணப்படும் எனவும் கூறியுள்ளார்.

Related Stories: