திருச்சி அரசு மருத்துவமனையில் நரக வேதனையை அனுபவிக்கும் கொரோனா நோயாளிகள்

* சுகாதாரமான குடிநீர் இல்லை  

* கழிவறையில் தண்ணீர்  தட்டுப்பாடு

* நடைபாதையில் படுக்கை

* சமூக வலைதளங்களில் கதறல்

திருச்சி: திருச்சி அரசு தலைமை மருத்துவமனையில் கொரோனாவால் பாதிக்கபபட்டு சிகிச்சை பெற்றுவரும் வார்டுகளில் அடிப்படை வசதிகள் இல்லையென நோயாளிகள் உதவி கேட்டு போட்டோக்களை சமூக வலைதளங்களில் பதிவிட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திருச்சி அரசு மருத்துவமனையில் கொரோனா நோயாளிகள் சிகிச்சைக்காக சுமார் சுமார் 700க்கும் மேற்பட்ட படுக்கை வசதிகள் ஏற்படுத்தப்பட்டு செயல்பட்டு வருகிறது. இந்நிலையில் அடிப்படை வசதிகள் இல்லாமல் கொரோனா நோயாளிக அவதிப்பட்டு வரும் புகைப்படங்கள், சுகாதார பணியாளர்கள் நோயாளிகளை அசிங்கமாக பேசும் வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வெளியாகி நோயாளிகள் உதவி கேட்கும் வீடியோ பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி வருகிறது.

இதுகுறித்து அங்கு சிகிச்சை பெற்று வரும் நோயாளி முதியவர் ஒருவரை தொடர்பு கொண்டபோது, எம்எஸ் வார்டில் கடந்த 10 நாட்களுக்கும் மேலாக கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறோம். எங்கள் வார்டில் உள்ளவர்கள் தீவிர பாதிப்பு ஏற்பட்டவர்கள். மூச்சு வாங்குவது போன்ற பிரச்னைகள் உள்ளவர்கள் இங்கு இருக்கிறோம். எங்களில் வயதானவர்கள் இருக்கின்றனர். கொரோனா வார்டு என்பதால் அட்டன்டர் யாரும் இருப்பதில்லை. கொரோனா நோயாளிகள் என்பதால் எங்களை வெளியே விடுவதில்லை. சிறைவாசி போல எங்களை நடத்துகின்றனர். மருத்துவர்கள் சிகிச்சையில் எங்களுக்கு குறையில்லை. ஆனால் அடிப்படை வசதி என்பது இங்கு ஜீரோவாக உள்ளது.

ஒவ்வொரு மனிதனுக்கு அத்தியாவசிய தேவைகளில் குடிநீரும் ஒன்று. ஆனால் இங்கு 50க்கும் மேற்பட்ட நோயாளிகள் இருக்கிறோம், இதற்கு 20 லிட்டர் கேனில் தண்ணீர் வைத்துள்ளனர். மினரல் வாட்டர் என்று நினைத்து விடவேண்டாம். தண்ணீர் தீர்ந்துவிட்டது என்றால் எங்கிருந்தாவது தண்ணீர் கொண்டு வந்து அந்த கேனில் ஊற்றி நிரப்பி வைப்பார்கள். கேட்டால் இது தான் மினரல் வாட்டர் என்கின்றனர். மினரல் கேனில் நோயாளிகளுக்கு தண்ணீர் வழங்கப்படுகிறது என தம்பட்டம் அடிக்கின்றனர். நோயாளிகளின் வார்டுகளில் காற்று வசதி கிடையாது. பெட்டுகள் நிரம்பி நடைபாதைகளில் படுக்கைகள் போடப்பட்டுள்ளது. அறைகளில் உள்ள பல மின்விசிறிகள் ஓடவில்லை.

இந்நிலையில் நடைபாதைகளில் உள்ளவர்களுக்கு எந்தவசதியும் கிடையாது. கொசு வலைகள் எந்த நோயாளிகள் அறையிலும் கிடையாது. அதேபோல் ஜன்னல்கள் மூடப்பட்ட அறையும் கிடையாது. கதவுகள் சிதிலமடைந்து திறந்தவெளிபோல் உள்ளது. இங்கு சூரியன் மறையத்தொடங்கிவிட்டாலே கொசுத்தொல்லை அதிகரித்து விடும். ஒவ்வொரு இரவும் கொசுவோடு போராடும் இரவாக உள்ளது. அதே போல் இயற்கை உபாதையை கழிக்க கழிவறைக்கு சென்றால் அங்கு தொட்டியில் தண்ணீர் இருப்பதில்லை, பக்கெட்டுகள் இருப்பதில்லை. எங்களின் நிலையை நினைத்து பாருங்கள், நரக வேதனையில் அவதிபட்டுக்கொண்டு இருக்கிறோம்.

இதிலெல்லாம் கொடுமை இங்குள்ள நோயாளிகளுக்கு கஞ்சி, பால், கசாயம் கொண்டு வந்து கொடுக்கின்றனர். அப்போது மாடிக்கு வந்து ஓடிவா ஓடிவா என அழைக்கின்றனர். முதல் தளத்திற்கு எதையும் கொண்டு வருவது கிடையாது. வயதானவர்கள், உடல்நிலை மோசமானவர்கள் எப்படி கீழே சென்று உணவு வாங்க முடியும்? இந்த வார்டில் ஓரளவு நலமுடன் இருப்பவர் உணவு கொண்டு வரும் போது மற்றவர்களுக்கும் வாங்குகின்றனர். அவர்கள் இதைப்போல் எத்தனை பேருக்கு ஒரே நேரத்தில் உணவு வாங்கித்தர முடியும். அந்த நேரங்களில் வயதானவர்கள் யாராவது நமக்கு கீழே சென்று உணவு வாங்கி தருவார்களா என பார்க்கும் போது கண்ணீரே வந்து விடுகிறது.

இங்கு 70க்கு மேற்பட்டோர் சிகிச்சை பெறுகிறார்கள் என்பதை யாரும் நினைத்து பார்ப்பது கிடையாது. இதையெல்லாம் வரக்கூடிய மருத்துவர்கள் கவனத்திற்கு கொண்டு செல்கிறோம். ஆனால் நடவடிக்கை இல்லை. அதனால் தான் யாராவது உதவி செய்யுங்கள் என படத்தை பதிவிட்டு உதவி கேட்டு வருகிறோம் என கலங்கியபடி பேசினார். இது குறித்து மருத்துவமனை டீன் வனிதாவிடம் கேட்க முயன்றபோது அவரது மொபைல் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டிருக்கிறது. அடிப்படை வசதிகள் செய்து தரக்கோரி நோயாளிகள் உதவி கேட்டு சமூக வலைதளங்களில் படங்கள், வீடியோக்களுடன் பதிவிட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Related Stories:

>