2 வருடமாக கொரோனாவால் மதுரையில் தேரோட்டம் இல்லாத சித்திரை திருவிழா: பக்தர்கள் வேதனை

மதுரை: கடந்த 2 ஆண்டுகளாக கொரோனா பரவல் எதிரொலியாக மதுரையில் தேரோட்டம் இல்லாத சித்திரை திருவிழாவால் பக்தர்கள் வேதனையடைந்துள்ளனர். மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் சித்திரைத் திருவிழா ஆண்டு தோறும் வெகு சிறப்பாக கொண்டாடப்படும். இந்த ஆண்டிற்கான திருவிழாவின் முதல் நிகழ்ச்சியாக வாஸ்து சாந்தி பூஜை (நிலத்தேவர் வழிபாடு) அதனைத் தொடர்ந்து ஏப்.15ம் தேதி திருவிழா கொடியேற்றம் தொடங்கியது. மீனாட்சி அம்மனுக்கு பட்டாபிஷேகம், திக்கு விஜயமும், திருக்கல்யாணத்தை தொடர்ந்து 25ம் தேதி மீனாட்சி, சுவாமி, பிரியவிடையின் தேரோட்டம் நடக்கும்.

இதற்காக சிறிய மற்றும் பெரிய தேர்கள் சீர் செய்யப்படும். ஆனால், கடந்த 2020ம் ஆண்டு சித்திரை திருவிழா கொரோனா தொற்று காரணமாக தடை செய்யப்பட்டது. இதனால் தேரோட்டம் நடக்கவில்லை. மேலும் மாசி வீதிகளில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் சிமெண்ட் சாலைகள் அமைக்கும் பணிகள் நடந்ததால் தேர் பவனி ரத்து செய்யப்பட்டது. சாலைகள் சீர் அமைக்கப்பட்டும், தேர்கள் வலம் வர சாலைகள் தயார் செய்யப்பட்ட நிலையில், 2வது அலை கொரோனா தொற்று காரணமாக 2 வது முறையாக தேரோட்டம் ரத்து செய்யப்பட்டதால் பக்தர்கள் வேதனையடைந்துள்ளனர்.

இதுகுறித்து மேலமாசிவீதியைச் சேர்ந்த பக்தர் ஒருவர் கூறுகையில், ‘‘ஆண்டு தோறும் சித்திரை திருவிழாவில் தேரோட்டம் என்பது மிக முக்கியமான நிகழ்ச்சியாக இருக்கும். மாசி வீதிகளில் பக்தர்கள் வெள்ளத்தில் தேர்கள் குலுங்க, குலுங்க பல ஆயிரம் பக்தர்கள் வடம் பிடித்து வரும் காட்சிகள் மதுரையில் விழாவை மேலும் கோலாகலப்படுத்தும். ஆனால், கடந்த 2 வருடமாக தேர்களை பழுது பார்க்காமல் கண்ணாடி பெட்டியில் மூடி வைக்கப்பட்டு இருக்கிறது. கொரோனாவால் தேர்ரோட்டம் இல்லாத சித்திரை திருவிழாவை காண்பது மக்களை ஏமாற்றத்துடன், வேதனையும் ஏற்படுத்தி இருக்கிறது’’ என்றார்.

Related Stories: