×

ஆயிரக்கணக்கில் மக்கள் சாகும் போது, ஆக்சிஜனுக்காக ஸ்டெர்லைட் ஆலையை திறக்க தமிழக அரசு மறுப்பது சரியா ? : நீதிபதிகள் அதிருப்தி!!

டெல்லி : 2018ல் நடந்தது போல் தூத்துக்குடியில் மீண்டும் ஒரு துப்பாக்கிசூடு நடக்க விரும்பவில்லை என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது. கொரோனா பரவல் அதிகரித்து வருவதால் மக்களுக்கு ஆக்சிஜன் உற்பத்தி செய்து இலவசமாக தருகிறோம் என்றும் ஆலையை திறக்க அனுமதி கொடுங்கள் என்றும் வேதாந்தா நிறுவனம் சார்பில் உச்சநீதிமன்றத்தில் கோரிக்கை மனு ஒன்று முன்வைக்கப்பட்டது. இது தொடர்பான வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது.

அப்போது, ஸ்டெர்லைட் ஆலையை திறக்க அனுமதி வழங்க முடியாது என தமிழக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதற்கு தனது அதிருப்தியை வெளிப்படுத்திய நீதிபதிகள், ஆக்சிஜன் இன்றி மக்கள் இறந்து கொண்டிருக்கும் சூழலில் ஆலையை திறக்க கூடாது என தமிழக அரசு கூறுவது சரியா?என கேள்வி எழுப்பியதோடு ஸ்டெர்லைட் ஆலையை தமிழக அரசே ஏற்று நடத்தலாம் என்றும் எந்த நிறுவனம் என்பது முக்கியமல்ல, மக்களின் உயிர் தான் முக்கியம் என்றும் கருத்து தெரிவித்தனர்.

இதற்கு அரசு தரப்பில், கடந்த 2018ல் நடந்தது போல தூத்துக்குடியில் மீண்டும் ஒரு துப்பாக்கிச்சூடு சம்பவம் நடக்க விரும்பவில்லை. 2018ல் சம்பவம் நடந்தாலும் சட்டம்-ஒழுங்கு பிரச்சினை இன்னமும் தொடர்கிறது என்று தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து, ஆலையை திறப்பது குறித்து தமிழக அரசு பதிலளிக்க உத்தரவிட்ட நீதிபதிகள் வழக்கு விசாரணையை திங்கட்கிழமைக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டனர்.

Tags : Tamil Nadu government , துப்பாக்கிசூடு
× RELATED மதுரை மாநகராட்சியில் கால்நடை...