கண்டமனூர் அருகே 2 மாதமாக கிடப்பிலே கிடக்கும் சாலை பணி: பொதுமக்கள் அவதி

வருசநாடு: கண்டமனூர் அருகே 2 மாதமாக கற்கள் கொட்டியதோடு கிடப்பில் கிடக்கும் சாலை பணியால் பொதுமக்கள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். கண்டமனூர் அருகேயுள்ளது பழயை ராமச்சந்திராபுரம். இவ்வூருக்கு செல்லும் ஒன்றரை கிமீ மண்சாலையை தார் சாலையாக்க திட்டமிடப்பட்டது. அதன்படி கடந்த 2 மாதங்களுக்கு முன்பு சாலை பணிக்காக ஜல்லி கற்களை கொட்டி சென்றனர். அதன்பின் இதுவரை எந்த பணியும் நடைபெறவில்லை. இப்பகுதி மக்கள் ஒவ்வொரு நாளும் அத்தியாவசிய தேவைகளுக்கு தேனி, ஆண்டிபட்டி, கண்டமனூர் ஆகிய ஊர்களுக்கு வாகனங்களில் மற்றும் நடந்து சென்று வருகின்றனர்.

தற்போது கற்கள் கொட்டி கிடப்பதால் சாலையில் பயணிக்கவே பெரும் சிரமத்திற்குள்ளாகின்றனர். இருசக்கர, நான்கு சக்கர வாகனங்களில் செல்லும் போது கற்கள் டயர்களை பதம் பார்த்து பஞ்சராக்கி விடுகிறது. மேலும் செல்ல வேண்டிய இடங்களுக்கும் முறையான நேரத்திற்கு செல்ல முடியாத சூழ்நிலை ஏற்படுகிறது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் கிடப்பில் போடப்பட்ட தார் சாலை பணியை விரைந்து முடித்து பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் என இப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories: