சின்னமனூர் பகுதியில் மழைக்கு சாய்ந்த நெற்கதிர்கள்: விவசாயிகள் கவலை

சின்னமனூர்: சின்னமனூர் பகுதியில் சூறாவளியுடன் பெய்த கனமழையால் நெற்கதிர்கள் சாய்ந்து நாசமாகி விட்டது. இதனால் விவசாயிகள் கவலையடைந்துள்ளனர். சின்னமனூர், மார்க்கையன்கோட்டை, குச்சனூர் பகுதிகளில் முல்லை பெரியார் பாசனத்தில் இருபோக நெல் சாகுபடி நடந்து வருகிறது. மழை இல்லாத போது தண்ணீரின்றி இருபோக நெல் சாகுபடியில் சுணக்கம் வந்து விடக்கூடாது என்பதற்காக சில விவசாயிகள் விளைநிலங்களில் ஆழ்துளை கிணறுகள் அமைத்து தற்காப்பு செய்து வைத்துள்ளனர். அதன்படி கடந்த ஜனவரி மாதம் ஆழ்குழாய் பாசனத்தில் சுமார் 300 ஏக்கரில் இருபோகத்தில் நெல் பயிரிட்டிருந்தனர்.

நெற்கதிர்கள் நன்கு விளைந்து அறுவடைக்கு தயார் நிலையை நெருங்கியது. இந்நிலையில் கடந்த 3 நாட்களுக்கு முன்பு சூறாவளி காற்றுடன் பெய்த கனமழையால் விளைநிலங்களில் மழைநீர் புகுந்து நெற்கதிர்களை சாய்த்து நாசம் செய்து விட்டது. இதனால் விவசாயிகள் கவலையடைந்துள்ளனர். இதுகுறித்து அவர்கள் கூறுகையில், ‘வயல்வெளிகளில் தேங்கிய மழைநீரை வெளியேற்றி வருகிறோம். எனினும் சூறாவளி காற்றில் பெரும்பான்மையான நெற்கதிர்கள் அடியோடு சாய்ந்து விட்டது. பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும்’ என்றனர்.

Related Stories:

>