கொரோனா பாதிப்பு அதிகரிப்பு... இந்தியாவில் இருந்து வரும் பயணிகள் விமானங்களுக்கு 30 நாட்கள் தடை விதித்தது கனடா அரசு!!

டெல்லி : கொரோனா பாதிப்பு அதிகரிப்பு எதிரொலியாக இந்தியாவில் இருந்து வரும் பயணிகள் விமானங்களுக்கு கனடா அரசு 30 நாட்கள் தடை விதித்து உத்தரவிட்டுள்ளது. உலகத்தில் எந்த நாட்டிலும் இல்லாத அளவுக்கு இந்தியாவில் கொரோனா வைரஸ் ஒருநாள் தொற்று 3.32 லட்சத்தை கடந்துள்ளது. அதனால் நியூசிலாந்து, பிரிட்டன் ஆகிய நாடுகள் இந்தியாவில் இருந்து வரும் பயணிகளுக்கு ஏற்கனவே தடை விதித்துள்ளன. இந்தியாவுக்கு பயணம் மேற்கொள்ள வேண்டாம் என்று அமெரிக்க அரசும் அந்நாட்டு மக்களை அறிவுறுத்தி உள்ளது.

இந்த நிலையில், இந்தியா மற்றும் பாகிஸ்தான் ஆகிய நாடுகளின் பயணிகள் விமானங்கள், கனடா வருவதற்கு 30 நாட்கள் தடை விதித்து அந்நாட்டு அரசு உத்தரவிட்டது. இந்தியா மற்றும் பாகிஸ்தான் ஆகிய நாடுகளில் இருந்து வரும் விமானங்களை பயணிகளுக்கு தொற்று பாதிப்பு இருப்பது அதிகரித்து வருவதால் தடை விதிக்கப்படுவதாக கனடா அரசு தெரிவித்துள்ளது. இதையடுத்து பயணிகள் விமானங்களுக்கான தடை உத்தரவு உடனடியாக அமலுக்கு வந்துள்ளது. இருப்பினும் 30 நாள் பயண தடை உத்தரவு சரக்கு விமானங்களுக்கு பொருந்தாது என்று கனடா அரசு தெரிவித்துள்ளது.

Related Stories: