ஆக்சிஜன் தட்டுப்பாட்டால் அதிகரிக்கும் உயிரிழப்பு: குவியல் குவியலாய் உடல்களை எரிக்கும் அவலம்

டெல்லி: வடமாநிலங்களில் ஆக்சிஜன் தட்டுப்பாட்டால் உயிரிழப்புகள் அதிகரித்து வரும் நிலையில் குவியல் குவியலாக உடல்கள் எரிக்கப்படும் காட்சிகள் அதிர்ச்சியை ஏற்படுத்துகின்றன. கொரோனா 2-வது அலை இந்தியாவில் ருத்ரதாண்டவம் ஆடி வருகிறது. இந்தியாவில் தினசரி பாதிப்பு 3.30 லட்சத்தை தாண்டியது. கடந்த 24 மணி நேரத்தில் 2,263 பேர் உயிரிழந்துள்ளனர். தலைநகர் டெல்லி மருத்துவமனைகளில் நிலவும் ஆக்சிஜன் தட்டுப்பாட்டால் கொத்து கொத்தாக மக்கள் உயிரிழந்து வருகின்றனர். நிரம்பி வழியும் மருத்துவமனைகளில் ஆக்சிஜன் கிடைக்காததால் தங்கள் கண் முன்னே உறவுகள் உயிரிழப்பதை காண முடியாத மக்கள் கதறி அழுதனர்.

டெல்லியில் பல இடங்களில் ஆக்சிஜன் தயாரிப்பு நிறுவனங்களின் முன்பு மக்கள் நீண்ட வரிசையில் காத்திருக்கின்றனர். உத்திரப்பிரதேச மாநிலத்தில் நிலவும் ஆக்சிஜன் தட்டுப்பாட்டால் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டவர்கள் அடுத்தடுத்து உயிரிழந்ததால் உறவினர்கள் கதறினர். தினசரி இறப்பு அதிகமாக உள்ளதால் அங்கங்கே உடல்களை வைத்து எரிக்கும் அவலம் அரங்கேறி வருகிறது. ஹரியானா, மத்தியப்பிரதேசம், உள்ளிட்ட மாநிலங்களில் கொரோனா தடுப்பு மருந்துகள் கொள்ளை போனதால் போலீசார் விசாரித்து வருகின்றனர். இந்த மாநிலங்களில் கொரோனாவுக்கு பலியானவர்களின் எண்ணிக்கை மிகவும் குறைத்து காட்டப்படுவதாக பொதுமக்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.

போபாலில் ஆக்சிஜன் வாங்குவதற்காக வாகனங்களில் மக்கள் காத்து கிடக்கின்றனர். இதனிடையே கொரோனா தடுப்பு பணிகள் குறித்து உயர்மட்ட குழுவினருடன் பிரதமர் மோடி ஆலோசனை நடத்தி வருகிறார்.

Related Stories: