கொரோனா பரவலுக்கு மத்தியில் கேரளாவில் பிரசித்தி பெற்ற 'திருச்சூர் பூரம்'நிகழ்ச்சி தொடங்கியது!: பார்வையாளர்கள் இன்றி சடங்குகளுக்கு மட்டுமே அனுமதி..!!

திருவனந்தபுரம்: கேரள மாநிலம் திருச்சூரில் பூரம் திருவிழாவிற்காக திருச்சூர் நகரம் சீல் வைக்கப்பட்டு பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகளுடன் நிகழ்வுகள் தொடங்கியுள்ளது. நெய்தலை காவு பகவதியின் திடம்பு ஏந்தி தெற்கு நடை வழிவந்து நிகழ்ச்சி தொடங்கப்பட்டுள்ளது. கொரோனா பெருந்தொற்று மிகப்பெரிய அளவில் நாடு முழுவதும் பரவிக் கொண்டிருக்கக்கூடிய இந்த காலகட்டத்தில் இதற்கு முன்னதாகவே திருச்சூர் பூரத்திற்கு கேரள சுகாதாரத்துறை அனுமதி அளித்திருந்தது. தற்போது கொரோனா 2ம் அலை வேகமெடுத்துள்ளதால் திருச்சூர் பூரம் நிகழ்ச்சி நடைபெறாது என அறிவிக்கப்பட்டது.

தொடர்ந்து பூரம் நடத்தக்கூடிய நிர்வாகிகள், நிகழ்ச்சியை பிரம்மாண்டமாக நடத்தாமல் பார்வையாளர்களின்றி எளிமையான சடங்காக நடத்திக் கொள்கிறோம் என கோரிக்கை வைத்ததன் அடிப்படையில் கேரள சுகாதாரத்துறை சடங்குகளை மட்டும் நடத்துவதற்கு அனுமதி அளித்திருக்கிறது. அதன் அடிப்படையில் இன்று காலையில் திருச்சூர் பூரம் நிகழ்ச்சியானது தொடங்கியிருக்கிறது. இதற்காக திருச்சூர் நகரம் முழுவதும் சீல் வைக்கப்பட்டுள்ளது. இந்த நகர் பகுதி முழுவதும் போலீசாரின் முழு கட்டுப்பாட்டில் வந்துள்ளது. வெளியாட்கள் யாரும் உள்ளே வராதபடி சீல் வைக்கப்பட்டது.

அதுமட்டுமின்றி பூரம் நிகழ்ச்சியில் பங்கேற்ற அனைவருமே கொரோனா பரிசோதனை செய்யப்பட்டு தொற்று பாதிப்பு இல்லை என தெரிந்த பின்னரே அனுமதிக்கப்பட்டனர். வழக்கமாக நூற்றுக்கணக்கான யானைகள் இந்த பூரம் நிகழ்ச்சியில் கலந்துகொள்ளும். கொரோனா பெருந்தொற்று காரணமாக இந்த ஆண்டு பாரியம்மா காவு பகவதி அம்மனுக்கு 15 யானைகளும், திருவம்பாடி பகவதி அம்மனுக்கு 1 யானை என மொத்தம் 16 யானைகள் மட்டுமே சடங்கில் பங்கேற்கவுள்ளதாக அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இந்த 16 யானைகள் கலந்துகொள்ளக்கூடிய கொடை மாற்ற நிகழ்ச்சி என்கின்ற சடங்கு இன்று மாலை நடைபெறவுள்ளது குறிப்பிடத்தக்கது.

Related Stories: