மாஸ்க் இறக்குமதி செய்து தருவதாக தொழிலதிபரிடம் ரூ.46 லட்சம் மோசடி: தனியார் நிறுவன அதிகாரிகள் 3 பேர் மீது வழக்கு

சென்னை: சென்னை ஆலந்தூர் உசையின் தபேதார் தெருவை சேர்ந்தவர் நரேஷ்(29). தொழிலதிபரான இவர், கடந்த 2020ம் ஆண்டு கொரோனா ஊரடங்கு காலத்தில் முகக்கவசம் மொத்தமாக வாங்கி விற்பனை செய்ய முடிவு செய்தார். அப்போது மயிலாப்பூரில் இயங்கி வரும் தனியார் நிறுவனம் ஒன்று அயல் நாடுகளில் இருந்து முகக்கவசம் இறக்குமதி செய்து தருவதாக விளம்பரம் செய்து இருந்தனர். இதை பார்த்த தொழிலதிபர், சம்பந்தப்பட்ட தனியார் நிறுவனத்தை அணுகினார்.

அப்போது நிறுவன அதிகாரிகளான அபிராஜ் (32), சுவேதா (28), ஹரி (52) ஆகியோர் டென்மார்க், ஜெர்மன் மற்றும் ஐரோப்பிய நாடுகளில் இருந்து மொத்தமாக என்95 வகையை சேர்ந்த முகக்கவசம் இறக்குமதி செய்து தருவதாக உறுதி அளித்தனர்.

அதன்படி தொழிலதிபரிடம் ரூ.46 லட்சம் முன் பணம் வாங்கி உள்ளனர். ஆனால் அவர்கள் சொன்னபடி வெளிநாடுகளில் இருந்து முகக்கவசம் இறக்குமதி செய்து தரவில்லை. அதைதொடர்ந்து சம்பவம் குறித்து தொழிலதிபர் நரேஷ், மயிலாப்பூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். போலீசார் விசாரணையில் தொழிலதிபரிடம் முகக்கவசம் மொத்தமாக இறக்குமதி செய்து தருவதாக ரூ.46 லட்சம் பெற்று ஏமாற்றியது தெரியவந்தது. பின்னர் தனியார் நிறுவன அதிகாரிகள் அபிராஜ், சுவேதா, ஹரி ஆகியோர் மீது ஐபிசி 420, 465, 468, 506(1) ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்தனர். போலீசார் தங்கள் மீது வழக்கு பதிவு செய்த தகவலை அறிந்த 3 பேரும் தற்போது தலைமறைவாகி விட்டனர். அவர்களை போலீசார் தொடர்ந்து தேடி வருகின்றனர்.

Related Stories: