நாசிக் அரசு மருத்துவமனை போல ராஜிவ் காந்தி அரசு மருத்துவமனையிலும் ஆக்சிஜன் கசிவு: நோயாளிகளுக்கு பாதிப்பு இல்லை என தகவல்; அலட்சியம் என உறவினர்கள் குற்றச்சாட்டு

சென்னை: ராஜிவ் காந்தி அரசு மருத்துவமனையில் டேங்கர் லாரியில் இருந்து ஆக்சிஜனை, டேங்குக்கு நிரப்பும்போது கசிவு ஏற்பட்டதால், அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. மேலும் எந்தவிதமான பாதிப்பும் ஏற்படவில்லை என்று மருத்துவமனை ஊழியர்கள் தெரிவித்தனர். சென்னை ராஜிவ் காந்தி, ஸ்டான்லி, கீழ்ப்பாக்கம், ஓமந்தூரார் பன்நோக்கு மருத்துவமனை, கிண்டி கிங்ஸ் இன்ஸ்டிடியூட் ஆகிய 5 மருத்துவமனைகளில் 4,368 படுக்கைகள் உள்ளன. தற்போது, 2,933 பேர் கொரோனா சிகிச்சையில் உள்ளனர்.

இதில் 45 வயதுக்கு மேற்பட்டவர்கள் மற்றும் இணை நோய் இருப்பவர்களில் பலர், தீவிர மூச்சுத்திணறலால் அவதிப்படுகின்றனர். எனவே, மருத்துவமனைகளுக்கு கூடுதல் ஆக்சிஜன் தேவைப்படும். எனவே, மாநிலம் முழுவதும் உள்ள அரசு மருத்துவமனைகளுக்கு வழக்கமாக அளித்து வந்த ஆக்சிஜன் அளவை உயர்த்தி அளிக்க தமிழக சுகாதாரத்துறை உத்தரவிட்டுள்ளது. வழக்கமாக, ராஜிவ் காந்தி அரசு மருத்துவமனைக்கு 1 டேங்கர் லாரி ஆக்சிஜன் தரப்படும். இந்நிலையில் நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதால், அதிக ஆக்சிஜன் தேவைப்படுகிறது. எனவே, தற்போது, ஒரு டேங்கர் ஆக்சிஜனுக்கு பதிலாக 4 டேங்கர் கூடுதலாக வழங்கப்படுகிறது. அதன்படி நேற்று காலை 9 மணியளவில் சென்னை ராஜிவ் காந்தி அரசு மருத்துவமனைக்கு வந்த ஆக்சிஜனை லாரியில் இருந்து மருத்துவமனையில் உள்ள டேங்கிற்கு மாற்றினர்.

அப்போது லாரியில் இருந்து மாற்றும் போது கசிவு ஏற்பட்டு புகை மண்டலம் போல் காட்சியளித்தது. இதேபோன்று தான் நேற்று முன்தினம் மகாராஷ்டிரா மாநிலம், நாசிக் நகரில் டேங்கில் ஆக்சிஜன் நிரப்பும் போது திடீரென கசிவு ஏற்பட்டு 24 நோயாளிகள் உயிரிழந்துள்ளனர்.மேலும் ராஜிவ் காந்தி மருத்துவமனையில் டேங்கில் நிரப்பப்படும்போது ஆக்சிஜன் கசிவு ஏற்பட்டு புகை மண்டலம் போல் காட்சியளித்தது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நோயாளிகளின் உறவினர்கள் மத்தியில் நாசிக்கில் நடந்த போது போல் ஏதாவது அசம்பாவிதம் நடந்து விடுமோ என்ற அச்சத்தில் இருந்தனர். ஆனால் எந்தவிதமான பாதிப்பும் ஏற்படவில்லை. உடனடியாக கசிவு சரி செய்யப்பட்டது. இதனால் நோயாளிகள் மற்றும் உறவினர்கள் நிம்மதியடைந்தனர். மேலும் ஆக்சிஜன் பற்றாக்குறை ஏற்பட்டுள்ள நிலையில் இதுபோன்று அலட்சியமாக லாரியில் இருந்து டேங்கருக்கு மாற்றுவது கண்காணிக்கப்பட வேண்டும் என்று நோயாளிகளின் உறவினர்கள் கூறுகின்றனர்.

Related Stories: