அரசு ஒதுக்கி உள்ள ரூ.61 கோடி நிதியை பயன்படுத்தி தமிழகத்தில் கோவிட் கவனிப்பு மையங்களை செயலாக்கத்துக்கு கொண்டுவர வேண்டும்: மாவட்ட கலெக்டர்களுக்கு அரசு உத்தரவு

சென்னை: கோவிட் மையங்களை பராமரிக்க ரூ.61 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக தலைமைச் செயலாளர் ராஜீவ் ரஞ்சன் தெரிவித்துள்ளார். இது குறித்து தமிழக அரசு வெளியிட்ட அறிவுரை: தமிழ்நாட்டில் கொரோனா நோய்த் தொற்று அதிகரித்து வரும் சூழலை கருத்தில் கொண்டு நேற்று தலைமைச் செயலாளர் ராஜீவ் ரஞ்சன், தலைமையில் கொரோனா நோய்த் தொற்று தடுப்பு நடவடிக்கைகள் தொடர்பான விரிவான ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து அனைத்து மாவட்ட ஆட்சியர்கள் மற்றும் சென்னை மாநகராட்சி ஆணையர் காணொலி காட்சி மூலமாக ஆய்வுக் கூட்டமும் நடைபெற்றது.

இந்த ஆய்வுக் கூட்டத்தில் அரசு ஆலோசகர் சண்முகம், காவல் துறை தலைவர் திரிபாதி, அரசு கூடுதல் தலைமைச் செயலாளர் அதுல்ய மிஸ்ரா, வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை, அரசு கூடுதல் தலைமைச் செயலாளர் நிதித் துறை கிருஷ்ணன் அரசு கூடுதல் தலைமைச் செயலாளர் வருவாய் நிர்வாக ஆணையர் பணீந்திர ரெட்டி, சுகாதரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன், சென்னை தெற்கு காவல் துறை கூடுதல் ஆணையர் கண்ணன், மற்றும் அரசு செயலாளர்கள்,  இதர அரசு உயர் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

பின்னர் தலைமைச் செயலாளர் ராஜீவ் ரஞ்சன் ஆய்விற்கு பின்பு கீழ்க்காணும் உத்தரவு மற்றும் அறிவுரைகளை சம்பந்தப்பட்ட துறையினருக்கு வழங்கினார்.கோவிட் கவனிப்பு மையங்களை பராமரிக்க முதற்கட்டமாக 61 கோடி ரூபாய்  நிதி ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. எனவே மாவட்ட ஆட்சியர்கள் உடனடி நடவடிக்கை எடுத்து அனைத்து கோவிட் கவனிப்பு மையங்களை செயலாக்கத்திற்கு கொண்டுவர வேண்டும். போர்கால அடிப்படையில் பிராணவாயு வசதி கொண்ட படுக்கை எண்ணிக்கையை சென்னை மற்றும் இதர மாவட்டங்களில் மேலும் உயர்த்த பொதுப் பணித் துறை நடவடிக்கை எடுக்க வேண்டும்.

கோவிட் தொற்று உறுதி செய்யப்பட்டவர்களை பிரத்தியேகமாக ஏற்படுத்தப்பட்ட சோதனை முகாம்களில் உடனடியாக மருத்துவப் பரிசோதனை செய்து தொற்றின் வீரியத்திற்கு ஏற்றவாறு தரம் பிரித்து கோவிட் கவனிப்பு மையம்  அல்லது பிரத்தியேக கோவிட் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு மருத்து துறை சிகிச்சை அளிக்க வேண்டும். தொற்றின் வீரியத்திற்கு ஏற்றவாறு உரிய இடத்தில் நோயாளிகளுக்கு சிகிச்சை கிடைக்க வழிவகை செய்ய வேண்டும். மேலும் கோவிட் கவனிப்பு மையம் எண்ணிக்கையை கடந்த ஆண்டை விட கூடுதலாக உயர்த்த வேண்டும்.

ஏற்கனவே, கண்டறியப்பட்ட கல்லூரிகள், தொழில் நிறுவனங்கள், பள்ளிகள், இன்ன பிற கட்டடங்களை, மாவட்ட ஆட்சியர்கள் உரிய வழிமுறையை பின்பிற்றி பயன்படுத்த வேண்டும். பொது மக்கள் தங்கள் சந்தேககங்களை ‘104’ என்ற எண்ணை தொடர்பு கொண்டு தெளிவு பெறலாம். கோவிட் தொற்று பாதித்தவர்களுக்கு உரிய சிகிச்சை கிடைக்க போதுமான அளவு பிராணவாயு இருப்பு நிலையை கூர்ந்து கவனித்து, தொழிற்சாலைகள் மற்றும் சுகாதாரத் துறை மூலமாக உறுதிசெய்ய வேண்டும். பரிசோதனைகளை அதிகப்படுத்தி நாளொன்றுக்கு நோய்த் தொற்றின் விகிதம் 5 சதவிகிதத்துக்கும் கீழ்கொண்டுவர வேண்டும்.

கொரோனா முடிவுகளை 24 மணி நேரத்திற்குள் தெரிவிக்க வேண்டும். ‘108’ அவசரகால ஊர்திகளை முழு செயல்பாட்டில் வைக்க வேண்டும். தமிழ்நாட்டைப் பொறுத்தவரை மருத்துவ வல்லுநர் குழு அமைக்கப் பெற்று, நிலையான சிகிச்சை நெறிமுறைகள் வகுக்கப்பட்டு அனைத்து அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளுக்கும் சுற்றறிக்கை அனுப்பப்பட்டு பின்பற்றப்படுகிறது. நிலையான வழிகாட்டுநெறி முறைகளை ஊடகங்கள், துண்டு பிரசுரங்கள், சமூக வலைதளங்கள் மற்றும் சுகாதார ஊழியர்கள் மூலமாக அனைத்து மக்களுக்கும் வலியுறுத்தப்படவேண்டும்.

மத்திய அரசின் நெறிமுறைகளின்படி 21.04.2021 வரை மொத்தம் 49,23,935 பயனாளிகளுக்கு தடுப்பூசி வழங்கப்பட்டுள்ளது. மக்களிடையே இது தொடர்பாக தொடர்ந்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. ஏப்ரல் 30ம் தேதிக்குள் குறைந்தது 10லிருந்து 12லட்சம் தகுதி வாய்ந்த நபர்களுக்கு தடுப்பூசி போட வேண்டும். மே 1ம் தேதி முதல் தடுப்பூசி முகாம்கள் மூலம் தகுதிவாய்ந்தவர்களுக்கு தடுப்பூசி போடுவதற்கான வழிமுறைகள் வகுக்கப்பட்டு வருகிறது. மேலும் பொது சுகாதார இயக்குனரகம் மற்றும் அனைத்து மாவட்ட தலைநகரங்களிலும் கட்டுப்பாட்டு அறை 24 மணி நேரமும் செயல்பாட்டில் வைக்கப்படவேண்டும். இவ்வாறு தமிழக அரசு வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. மருத்துவப் பரிசோதனை செய்து தொற்றின் வீரியத்திற்கு ஏற்றவாறு தரம் பிரித்து கோவிட் கவனிப்பு மையம் அல்லது பிரத்தியேக கோவிட் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு மருத்து துறை சிகிச்சை அளிக்க வேண்டும்.

Related Stories:

>