கொரோனா நோயாளிகளுக்கு கான்சன்ரேட்டர் கருவி மூலம் ஆக்சிஜன் அளிக்கப்படுகிறது: மருத்துவமனை டீன் டாக்டர் ஜெயந்தி தகவல்

சென்னை: சென்னை ஓமந்தூரார் அரசு மருத்துவமனை ‘டீன்’ டாக்டர் ஜெயந்தி கூறியதாவது: ஆக்சிஜன் தேவை அனைத்து மருத்துவமனைகளிலும் அதிகரித்து உள்ளது. இந்த சூழ்நிலையில் ஆக்சிஜன் பயன்பாட்டை குறைத்து, நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கும் புதிய வழிமுறைகளை மேற்கொண்டு வருகிறோம். அதன்படி இங்குள்ள நோயாளிகளை அதிக நேரம் நிமிர்ந்து உட்கார வைக்கிறோம். அதன் மூலமாக அவர்களுக்கு ஒன்று முதல் 2 சதவீதம் ஆக்சிஜன் கூடுதலாக கிடைக்கிறது. அதேபோல், வயிற்று பகுதி கீழாக இருக்கும் வகையில் குப்புற படுக்க வைக்கிறோம், மூச்சு பயிற்சிகள் அளிக்கிறோம். இதன் மூலமாகவும் நோயாளிக்கு செயற்கை முறையில் ஆக்சிஜன் வழங்கப்படாமலே, 2 சதவீதம் வரை ஆக்சிஜன் கிடைக்கிறது.

குறிப்பாக, காற்றில் இருந்து ஆக்சிஜனை உற்பத்தி செய்யும் ‘ஆக்சிஜன் கான்சண்ட்ரேட்டர்’ கருவி மூலம் 5 லிட்டர் வரை ஆக்சிஜன் தேவைப்படும் நோயாளிகளுக்கு ஆக்சிஜன் வழங்கப்படுகிறது. இதன் மூலமாக திரவ ஆக்ஸிஜனை சேமித்து வருகிறோம். ஜனவரி மற்றும் பிப்ரவரி மாதங்களில் நாள் ஒன்றுக்கு 2 கிலோ லிட்டர் முதல் 3 கிலோ லிட்டர் வரை மட்டுமே நோயாளிகளுக்கு ஆக்சிஜன் பயன்படுத்தப்பட்டு வந்தது. ஆனால், தற்போது தினசரி 10 கிலோ லிட்டர் வரை பயன்படுத்தப்பட்டு வருகின்றன. ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் 24 கிலோ லிட்டர் மற்றும் 10 கிலோ லிட்டர் கொள்ளளவு கொண்ட 2 ஆக்சிஜன் டேங்க் உள்ளன. ஆக்சிஜனை கையாளுவதற்காக மயக்கவியல் துறை தலைவர் மற்றும் ‘டீன்’ தலைமையில் தனி குழு அமைக்கப்பட்டு தொடர்ந்து ஆக்சிஜன் செயல்பாடுகள் கண்காணிக்கப்பட்டு வருகிறது. இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories: