ஆக்சிஜன் தட்டுப்பாடு இல்லை ஸ்டெர்லைட் ஆலையை திறக்கக் கூடாது: வைகோ அறிக்கை

சென்னை: மதிமுக பொதுச்செயலாளர் வைகோ வெளியிட்ட அறிக்கை:கொரோனா தொற்று நோய்ப் பரவலால் ஏற்பட்டுள்ள இக்கட்டான நிலைமையைப் பயன்படுத்திக்கொண்டு, நாங்கள் ஆக்சிஜன் ஆக்கித் தருகின்றோம் என்று கூறி, ஸ்டெர்லைட் நச்சு ஆலையை மீண்டும் இயக்குவதற்கான முயற்சிகளை மேற்கொண்டு வருகிறார்கள். ஆனால், தமிழ்நாட்டில் ஆக்சிஜன் தட்டுப்பாடு இல்லை என மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சரும், செயலரும் தெளிவுபடுத்தி இருக்கின்றார்கள். அனைத்து இந்திய அளவிலும் கூட, ஆக்சிஜன் தட்டுப்பாடு இல்லை என்று, இந்தியாவின் முன்னணி ஆக்சிஜன் ஆக்க நிறுவனமான ஐநோக்ஸ் நிறுவனத்தின் இயக்குநர் சித்தார்த் ஜெயின் கூறி உள்ளார்.

அண்மையில், இந்தியாவில் இருந்து வங்கதேசத்திற்கு 8,828 மெட்ரிக் டன்னும், வேறு பல நாடுகளையும் சேர்த்து, மொத்தமாக 9,300 மெட்ரிக் டன் ஆக்சிஜன் ஏற்றுமதி செய்யப்பட்டு இருக்கின்றது. இந்தநிலையில், ஸ்டெர்லைட் ஆலையில் இருந்து பரவிய நச்சுக்காற்றால், தூத்துக்குடியில் ஆயிரக்கணக்கானோர் மயங்கி விழுந்தார்கள். அந்தப் பகுதி வாழ் மக்களுக்கும், உழவுத் தொழிலுக்கும் கேடு விளைவித்து வருகின்றது என்பதை சென்னை உயர் நீதிமன்ற, உச்ச நீதிமன்றத் தீர்ப்புகள் தெளிவுபடுத்தி இருக்கின்றன. எனவே, அந்த ஆலையை மீண்டும் இயக்க வேண்டிய தேவை இல்லை. அத்தகைய முயற்சிகளுக்கு, தமிழக அரசு இடம் தரக் கூடாது. இவ்வாறு கூறப்பட்டுள்ளது.

Related Stories: