விலை அதிகமாக இருப்பதால் ஏழைகளால் வாங்க முடியாது கொரோனா தடுப்பூசி விலையை குறைக்க வேண்டும்: மத்திய அரசுக்கு சென்னை ஐகோர்ட் அறிவுறுத்தல்

சென்னை: கொரோனா தடுப்பூசியின் விலையை அதிகமாக இருக்கிறது. அதை ஏழைகளால் வாங்க முடியாது. எனவே, விலையை குறைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மத்திய அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது. கொரோனா நோயாளிகளின் சிகிச்சைக்காக நாடு முழுவதும் ஆக்சிஜன் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. பல மருத்துவமனைகளில் ஆக்சிஜன் இல்லாததால் தொடர்ந்து உயிரிழப்புகள் ஏற்பட்டு வருகின்றன. இந்நிலையில், தமிழகத்துக்கு தெரியாமல், ஆந்திரா மற்றும் தெலங்கானா மாநிலங்களுக்கு 45 மெட்ரிக் டன் ஆக்சிஜனை மத்திய அரசு மடைமாற்றி அனுப்பியது.

இந்நிலையில், சென்னை உயர் நீதிமன்றத்தில் நேற்று காலை தலைமை நீதிபதி சஞ்சீப் பானர்ஜி, நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி ஆகியோர் அடங்கிய அமர்வு விசாரணையை தொடங்கியபோது, நீதிபதிகள், ஆந்திரா மற்றும் தெலங்கானா மாநிலங்களுக்கு தமிழகத்திலிருந்து ஆக்சிஜன் அனுப்பப்பட்டுள்ளது என்று பத்திரிகைகளில் செய்தி வந்துள்ளது. தமிழகத்தில் ரெம்டெசிவர் தனி நபர்களுக்கு வழங்கப்படுவதாகவும், ஆக்சிஜன் உற்பத்தி போதுமான அளவிற்கு உள்ளபோதும் வெளி மாநிலங்களுக்கு அனுப்பப்படுவதாகவும், வென்டிலேட்டர் பற்றாக்குறை உள்ளது எனவும் செய்தி வெளியாகி உள்ளது.

தற்போதைய நிலையில் குழப்பம் ஏற்படுத்துவதற்காக வழக்கை எடுக்கவில்லை. மற்ற மாநிலங்களில் உள்ள நிலை தமிழகத்தில் ஏற்பட்டுவிடக்கூடாது என்பதை கருத்தில் கொண்டு தமிழகத்தின் நிலையை அறிய விரும்புவதாக நீதிபதிகள் தெரிவித்துள்ளனர். தமிழகத்தில் ஆக்சிஜன் இருப்பு போதுமானதாக உள்ளதா என்பது குறித்து அட்வகேட் ஜெனரல் மதியம் தெரிவிக்குமாறு உத்தரவிட்டனர். இதையடுத்து, மதியம் 2.15 மணிக்கு வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, அட்வகேட் ஜெனரல் விஜய் நாராயண் ஆஜராகி, ரெம்டெசிவர் மருந்தை பொறுத்தவரை அரசு மருத்துவமனைகளில் 31 ஆயிரம் குப்பிகள் உள்ளன. தனியார் மருத்துவமனைகள் சிலவற்றில் இருப்பு இல்லை என்பதால் அரசிடம் கேட்டுள்ளனர்.

நாளொன்றுக்கு தமிழ்நாட்டில் 400 டன் மற்றும் புதுச்சேரியில் 150 டன் ஆக்சிஜன் உற்பத்தி செய்யப்படும் நிலையில், தற்போதைய தேவை என்பது 250 டன் மட்டுமே. அதனால், தமிழகத்தில் ஆக்சிஜன் உற்பத்தி தேவையை விட அதிகமாகவே உள்ளது. வென்டிலேட்டர் இருப்பை பொறுத்தவரை அரசு மருத்துவமனைகளில் 9600 வென்டிலேட்டர்கள் உள்ளன. அவற்றில், 5887 கொரோனா சிகிச்சைக்கு ஒதுக்கப்பட்டுள்ளன. தனியார் மருத்துவமனைகளில் 6000 வென்டிலேட்டர்கள் உள்ளன.  அவற்றில் 3000 கோவிட் சிகிச்சைக்கு ஒதுக்கப்பட்டுள்ளன. தமிழகத்தில் தற்போது 84,621 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். னைவருக்கும் வென்டிலேட்டர் அல்லது ஆக்சிஜன் தேவைப்படும் நிலை இல்லை. அதனால் படுக்கை, ஆக்சிஜன், வென்டிலேட்டர் என எதிலும் தமிழகத்தில் பற்றாக்குறை இல்லை. கொரோனா பரவலில் பதற்றமான நிலை என்பது தமிழகத்தில் தற்போது இல்லை என்றார். மத்திய அரசு சார்பில் கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் சங்கரநாராயணன் ஆஜராகி தான் வாதத்தை முன்வைத்தார்.

இந்த வாதங்களை கேட்ட தலைமை நீதிபதி அளித்த உத்தரவு வருமாறு: கொரோனா தடுப்பு பயன்பாட்டுக்கான ரெம்டெசிவர் இருப்பு, வென்டிலேட்டர் வசதி, தடுப்பூசி மற்றும் ஆக்சிஜன் இருப்பு ஆகிய 4 விஷயங்களை பற்றி விரிவாக ஆலோசிக்க வேண்டும். மே 1ம் தேதி முதல் 18 முதல் 45 வயதுக்கு உட்பட்ட அனைவருக்கும் கொரோனா தடுப்பூசி வழங்க மத்திய அரசு அறிவித்துள்ளது. இந்த நிலையில் தமிழகம் மற்றும் புதுச்சேரி தேர்தல் வாக்கு எண்ணிக்கை மே 2ம் தேதி நடத்தப்படவுள்ளது. அதுமட்டுமல்லாமல் இது ரமலான் மாதம். இதுபோன்ற நாட்களில் கொரோனா தொற்று அதிகம் பரவாமல் இருக்க உரிய நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். தேர்தல் ஆணையத்துடன் ஆலோசனை நடத்தி வாக்கு எண்ணிக்கை நாளில் கொரோனா பரவாமல் தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். தமிழகத்தில் கொரோனா தடுப்பூசி தட்டுப்பாடு உள்ளதாகவும், தனியார் மருத்துவமனைகளில் தடுப்பூசி மற்றும் ஆக்சிஜன் பற்றாக்குறை உள்ளதாகவும் செய்திகள் தெரிவித்துள்ளன.

ஆனால், தமிழகத்தில் தடுப்பூசி மற்றும் கட்டமைப்பு வசதிகள் போதுமானதாக இருப்பதாக அரசுத் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதே நேரம் தனியார் மருத்துவமனைகள் ஆக்சிஜன் தேவை என்று அரசிடம் கோரிக்கை வைத்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆக்சிஜன் உற்பத்தி அதிகமாக உள்ளதால் மற்ற மாநிலங்களுக்கு தமிழக அரசு உதவி செய்கிறது. தெலங்கானா, ஆந்திராவுக்கு 65 டன் ஆக்சிஜன் அனுப்பியதால் பாதிப்பு ஒன்றும் ஏற்படவில்லை என்று அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கொரோனா தடுப்பூசியின் விலை மிகவும் அதிகமாக உள்ளது. அரசு மருத்துவமனைகளுக்கு ரூ.400 விலையிலும், தனியார் மருத்துவமனைகளுக்கு ரூ.600 விலையிலும் தடுப்பூசிகள் தரப்படுகிறது. 18 வயது முதல் 45 வயது வரை உள்ளவர்களின் எண்ணிக்கை அதிகம். ஏற்கனவே கடந்த ஆண்டு முழுவதும் கொரோனா ஊரடங்கால் வேலை இழந்து, அடிப்படை வசதிகள் இழந்து வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் இவ்வளவு அதிகமான விலையில் கொரோனா தடுப்பூசியை மக்களால் வாங்குவது இயலாது.

எனவே, கொரோனா தடுப்பூசியை அனைத்து மக்களும் பயன்படுத்தும் வகையில் அதன் விலையை மத்திய அரசு குறைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இது தொடர்பாக மத்திய அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்கும் என்று நம்புகிறோம். விசாரணை வரும் 26ம் தேதிக்கு தள்ளிவைக்கப்படுகிறது. அப்போது, தமிழக அரசு தரப்பு மருத்துவமனைகளில் உள்ள படுக்கைகள், ஆக்சிஜன், தடுப்பூசி இருப்பு  ஆகியவை குறித்து தெரிவிக்க வேண்டும். இவ்வாறு உத்தரவில் கூறப்பட்டுள்ளது. தடுப்பூசியை அனைத்து மக்களும் பயன்படுத்தும் வகையில் அதன் விலையை மத்திய அரசு குறைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

Related Stories:

>