விமானம் தரையிறக்கப்பட்டதால் ‘பகீர்’ ஐதராபாத் விமானத்தில் கொரோனா நோயாளி: பயணிகள் அதிர்ச்சி; வலுகட்டாயமாக மருத்துவமனையில் சேர்ப்பு

சென்னை: சென்னை உள்நாட்டு விமான நிலையத்தில் இருந்து இண்டிகோ ஏர்லைன்ஸ் விமானம் நேற்று காலை 9 மணிக்கு ஐதராபாத் புறப்பட்டது. விமானத்தில் 85 பயணிகள் இருந்தனர். விமானம் ஓடுபாதையில் ஓட தொடங்கியது. அதில் பயணம் செய்த ஐதராபாத்தை சேர்ந்த ஆண் பயணி, அதிகமான இருமல், சளி தொல்லையால் அவதிப்பட்டார். உடனே சக பயணிகள் சந்தேகத்தில் பணிப்பெண்களிடம் தெரிவித்தனர். அவர்கள் விசாரித்தனர். மேலும், கொரோனா பரிசோதனை சான்றிதழை ஆய்வு செய்தனர். அவருக்கு கொரோனா பாசிட்டிவ் என்று இருந்தது. இதனால் அதிர்ச்சியடைந்த பணிப்பெண்கள், விமானிக்கு தகவல் கொடுத்தனர். உடனே விமான கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் கொடுக்கப்பட்டது.

சுகாதார துறைக்கும் தெரிவிக்கப்பட்டது.

விமானத்தின் கதவுகள் திறக்கப்பட்டன. விமான நிலைய அதிகாரிகள், சுகாதார துறையினர் விரைந்து வந்து கொரோனா பாதித்த பயணியை அவசரமாக கீழே இறக்கினர். பின்னர் அவருக்கு கவச பாதுகாப்பு உடை அணிவித்து தனி ஆம்புலன்சில் ஏற்றி சென்னை ஓமந்தூரார் அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். இதற்கிடையே விமானத்தில் இருந்த சக பயணிகள், ஊழியர்களிடம் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். சிறிது நேரத்துக்கு பிறகு 84 பயணிகள் மற்றும் விமான ஊழியர்கள் கீழே இறக்கப்பட்டனர். சுகாதார துறையினர் கிருமிநாசினி மருந்து அடித்து விமானத்தை சுத்தப்படுத்தினர். அதேபோல் பயணிகளும் கிருமிநாசினி மருந்தால் தங்களை சுத்தப்படுத்தி கொண்டனர். இதையடுத்து, விமானத்தில் பயணிகள் ஏற்றப்பட்டு, ஒன்றரை மணி நேரம் தாமதமாக காலை 10.30 மணிக்கு விமானம் புறப்பட்டு சென்றது. இச்சம்பவம் சென்னை விமான நிலையத்தில் நேற்று பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

Related Stories:

>