100 சதவீத ஊழியர்களுடன் தொடர்ந்து பணியாற்றி வருவதால் கொரோனாவால் பாதிக்கப்படும் அரசு ஊழியர்கள் எண்ணிக்கை அதிகரிப்பு: அலுவலகங்களில் கட்டுப்பாடுகள் இல்லை; 50% ஊழியர்களை பயன்படுத்த வலியுறுத்தல்

சென்னை: 100 சதவீத ஊழியர்களுடன் தொடர்ந்து பணியாற்றி வருவதால் அரசு அலுவலகங்களில் கொரோனாவால் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. தமிழகத்தில் தற்போது கொரோனா 2வது அலை வேகமெடுக்க தொடங்கியுள்ளதால் பாசிட்டிவ் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது. இந்த சூழ்நிலையில் மீண்டும் மாநில அரசு கடும் கொரோனா கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. மேலும், தனியார் நிறுவனங்கள், கடைகள், தொழிற்சாலைகளில் 50 சதவீத பணியாளர்களுடன் இயங்க அறிவுரை வழங்கப்பட்டுள்ளது. அதே நேரத்தில் அரசு அலுவலகங்களில் தொடர்ந்து 100 சதவீத ஊழியர்களுடன் இயங்கி வருகிறது.

இதனால், அரசு அலுவலகங்களில் கொரோனா தொற்றால் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. குறிப்பாக, கிண்டியில் உள்ள நெடுஞ்சாலைத்துறை தலைமை அலுவலகத்தில் உள்ள திட்ட மற்றும் வடிவமைப்பு அலுவலகத்தில் 7 பேர், ஒருங்கிணைந்த தலைமை பொறியாளர் அலுவலகங்களில் பணியாற்றி வரும் 10 பேர், சேப்பாக்கம் எழிலக வளாகத்தில் பொதுப்பணித்துறை தலைமை அலுவலகத்தில் பணிபரியும் 5 ஊழியர்கள் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

மேலும், சாந்தோமில் உள்ள பதிவுத்துறை தலைமை அலுவலகத்தில் 6 ஊழியர்கள், ஆயிரம் விளக்கு கிரீம்ஸ் சாலையில் உள்ள வணிகவரித்துறை அலுவலகத்தில் 4 ஊழியர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். இதே போன்று பல அரசு அலுவலகங்களிலும் கொரோனாவால் ஊழியர்கள் பலர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதை தொடர்ந்து அந்த அலுவலகங்கள் உடனடியாக மூடப்பட வேண்டும் என்று அரசு ஊழியர்களின் பல்வேறு சங்கங்கள் வலியுறுத்தி வருகின்றன. எனவே, அரசு அலுவலகங்களில் 50 சதவீதம் ஊழியர்கள் சுழற்சி முறையில் பணியாற்றுவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ஊழியர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். மேலும், இது தொடர்பாக தமிழ்நாடு பொறியாளர்கள் கூட்டமைப்பு சார்பில் அரசுக்கு கடிதம் எழுத திட்டமிட்டு இருப்பதாக அந்த கூட்டமைப்பினர் நிர்வாகிகள் சிலர் தெரிவித்தனர்.

Related Stories: