மருத்துவ ஆக்சிஜனை தயாரித்து வழங்குவதற்காக ஸ்டெர்லைட் ஆலையை திறக்க அனுமதிக்கலாம்: உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு தகவல் தமிழக அரசின் எதிர்ப்பையும் மீறி கருத்து

புதுடெல்லி: ‘கொரோனா நோயாளிகளுக்கு தேவையான ஆக்சிஜனை தயாரித்து வழங்குவதற்காக, ஸ்டெர்லைட் ஆலையில் உள்ள ஆக்சிஜன் உற்பத்தி பிரிவை மட்டும் திறக்க அனுமதிக்கலாம் என, உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசின் எதிர்ப்பையும் மீறி மத்திய அரசு தெரிவித்துள்ளது. நாடு முழுவதும் கொரோனா நோயாளிகளுக்கு அளிக்க பயன்படுத்தப்படும் மருத்துவ ஆக்சிஜனுக்கு கடும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இதை பயன்படுத்தி, தூத்துக்குடியில் உள்ள ஸ்டெர்லைட் ஆலை நிர்வாகமான வேதாந்தா, உச்ச நீதிமன்றத்தில் கடந்த 15ம் தேதி இடைக்கால மனுவை தாக்கல் செய்துள்ளது.  அதில், ‘நாடு  முழுவதும் கொரோனா தொற்றால் பாதித்து மருத்துவமனைக்கு வரும் நோயாளிகளுக்கு  சிகிச்சை அளிக்க போதுமான அளவுக்கு மருத்துவ ஆக்சிஜன் கிடைக்கவில்லை. இந்த  இக்கட்டான நேரத்தில் நாட்டுக்கு உதவி செய்வதற்காக, எங்கள் ஆலையில் உள்ள  ஆக்சிஜன் உற்பத்தி கூடத்தை திறக்க மட்டும் அனுமதி அளிக்க வேண்டும். அதில்  மருத்துவ ஆக்சிஜனை தயாரித்து, அரசுக்கு இலவசமாக சப்ளை தர தயாராக  இருககிறோம்,’ என கூறப்பட்டுள்ளது. இந்த வழக்கு நேற்று தலைமை நீதிபதி  எஸ்.ஏ.பாப்டே அமர்வில் நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது, வேதாந்தா  நிறுவனத்தின் சார்பில் வைக்கப்பட்ட கோரிக்கையில், ‘ஸ்டெர்லைட் ஆலையில் உள்ள  ஆக்சிஜன் உற்பத்திக் கூடத்தை திறக்க அனுமதிக்க கோரும் மனுவை அவசர வழக்காக  எடுத்து விசாரிக்க வேண்டும்,’ என வேண்டுகோள் விடுக்கப்பட்டது.

இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்த  தமிழக அரசு வழக்கறிஞர் சி.எஸ்.வைத்தியநாதன், ‘‘தமிழகத்தில் தற்போது ஆக்சிஜன் பற்றாக்குறை  இல்லை. மேலும், வேதாந்தா நிறுவனத்தின் இடைக்கால மனுவுக்கு பதிலளிக்க  அவகாசம் வேண்டும் என்பதால்,  இந்த வழக்கை 2 வாரங்கள் கழித்து விசாரிக்க  வேண்டும்,’’ என்றார். மத்திய அரசின் சார்பில் ஆஜரான கூடுதல்  சொலிசிட்டர் துஷார் மேத்தா, “கொரோனா பாதிப்பால் நாடு முழுவதும் மருத்துவ  ஆக்சிஜனுக்கு பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது.  இந்த இக்கட்டான சூழலில் எந்த வகையிலும் ஆக்சிஜன் தயாரிப்பை  மேற்கொள்ளலாம். அதனால், ஸ்டெர்லைட் ஆலையின் ஆக்சிஜன் உற்பத்திக் கூடத்தை மட்டும் திறக்க அனுமதி வழங்கலாம்,’’ என்றார். இந்த வழக்கை இன்று விசாரிப்பதாக, நீதிபதிகள் அறிவித்தனர். கருத்துகேட்பு கூட்டம்: இதனிடையே, ஸ்டெர்லைட் ஆலையில் ஆக்சிஜன் தயாரிக்க அனுமதிக்கலாமா என்பது குறித்து தூத்துக்குடி மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் கருத்து கேட்பு கூட்டம் இன்று காலை கலெக்டர் அலுவலகத்தில் நடக்கிறது.

Related Stories: