மக்கள் துயரத்தில் லாபம் பார்க்கும் மருந்து நிறுவனம் தடுப்பூசி விலையை உயர்த்த அனுமதி அளித்தது எப்படி?: பிரதமர் மோடிக்கு சோனியா காரசார கடிதம்

புதுடெல்லி: ‘அனைவருக்கும் பொதுவான தடுப்பூசி கொள்கையை உருவாக்குங்கள்’ என்று பிரதமர் மோடிக்கு காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி கடிதம் எழுதியுள்ளார். கொரோனாவின் 2ம் அலை தீவிரம் அடைந்துள்ள நிலையில், தடுப்பூசி போடுவது முக்கியத்துவம் பெற்றுள்ளது. இந்த இக்கட்டான சூழலில் மத்திய அரசால் செயல்படுத்தப்பட்டு வரும் தடுப்பூசி திட்டம் பாரபட்சமாக அமைந்துள்ளதாக காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி குற்றம்சாட்டி உள்ளார். இது தொடர்பாக, பிரதமர் மோடிக்கு அவர் எழுதியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது:கடந்த திங்கட்கிழமை அன்று 18 முதல் 45 வயது வரையிலான அனைவருக்கும் இலவச தடுப்பூசி வழங்கப்படும் என்று மத்திய அரசு உத்தரவாதம் அளித்த நிலையில், சீரம் இன்ஸ்டிட்யூட் தனது தடுப்பூசியின் விலையை கணிசமாக உயர்த்தியுள்ளது. மத்திய அரசுக்கு ரூ.150, மாநில அரசுகளுக்கு ரூ.400, தனியார் மருத்துவமனைகளுக்கு ரூ.600 என விலையை உயர்த்தி உள்ளது.  

இதனால், தடுப்பூசிக்காக அதிக கட்டணத்தை செலுத்த வேண்டிய நிர்ப்பந்துத்துக்கு நாட்டு மக்கள் ஆளாகி இருக்கின்றனர். இளைஞர்களுக்கு அரசாங்கம் செய்ய வேண்டிய கடமையில் இருந்து நழுவியதுடன், அவர்களை முழுவதுமாக கைவிட்டுள்ளது. தடுப்பூசியின் விலை உயர்வால், மாநில அரசுகளும் பெரும் பொருளாதார சிரமத்தை எதிர்கொண்டுள்ளது. ஒரே நிறுவனத்தின் ஒரே தடுப்பூசி மூன்று விதமான விலையில் விற்கப்படுவது ஏன்? இதில், எந்த நியாயமும் இல்லையே? குழப்பமான இந்த காலகட்டத்தில் பொதுமக்களின் துயரத்தில் இருந்து ஒரு மருந்து நிறுவனம் லாபம் ஈட்டுவதற்கு மத்திய அரசு எப்படி அனுமதித்தது? கடந்த ஆண்டிலேயே கொரோனாவால் கடினமான பாடங்கள் நமக்குக் கிடைத்தன. பொதுமக்கள் கடுமையான வேதனைகளை அனுபவித்தார்கள். அப்படி இருந்தும் மத்திய அரசின் நடவடிக்கைகளில் எந்த மாற்றமும் இல்லாதது ஆச்சரியம் அளிப்பதாக உள்ளது. தடுப்பூசி வழங்குவதில் தன்னிச்சையான, பாரபட்சமான போக்கினை அரசு தொடர்ந்து வருகிறது. உங்களின் இந்த மோசமான அணுகுமுறையால் நிலவரம் இன்னும் மோசமடையும் சூழல் ஏற்பட்டுள்ளது.

படுக்கை வசதிகள் இல்லாமை, ஆக்சிஜன் பற்றாக்குறை, அத்தியாவசிய மருந்துகள் தட்டுப்பாடு என சிக்கல்கள் நிறைந்த இந்த நேரத்தில் உணர்வற்ற இப்படி ஒரு தடுப்பூசி கொள்கையை அரசு அனுமதிக்கலாமா? எனவே, மத்திய அரசிடமுள்ள 50 சதவிகித தடுப்பூசிகளை வெளிப்படையாகவும், சமமாகவும், கூட்டாட்சி தத்துவத்துத்துக்கு ஒத்துழைப்பு அளிக்கும் விதத்திலும் வழங்க வேண்டும். உங்களின் தன்னிச்சையான, பாரபட்சமான தடுப்பூசி கொள்கையை உடனே கைவிட்டு அனைவருக்கும் சமமான தடுப்பூசி கொள்கையை உருவாக்குங்கள். இவ்வாறு கடிதத்தில் அவர் கூறியுள்ளார்.

Related Stories:

>