உறவினருக்கு உதவ டிவிட்டரில் வேண்டுகோள் பிளாஸ்மா தானம் கேட்ட பெண்ணின் செல்போனுக்கு வந்த ஆபாச படங்கள்: தொடர்பு எண் போட்டதால் விபரீதம்

மும்பை: கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த உறவினருக்கு பிளாஸ்மா தானம் கேட்டு டிவிட்டரில் வேண்டுகோள் விடுத்த பெண்ணுக்கு வந்து குவிந்த ஆபாச புகைப்படம், அழைப்புகள் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மும்பையை சேர்ந்தவர் ஷஸ்வதி சிவா. கொரோனாவால் பாதிக்கப்பட்ட இவரது உறவினர் ஒருவர், ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வந்தார். அவருக்கு வென்டிலேட்டர் மற்றும் பிளாஸ்மா தேவைப்பட்டது. இதற்காக உதவி கேட்டு டிவிட்டரில் வேண்டுகோள் விடுத்தார். அத்துடன், உதவி செய்பவர்கள் தொடர்பு கொள்வதற்காக, தனது மொபைல் எண்ணையும் வெளியிட்டார்.

அப்பாடா... இதைப் பார்த்து யாராவது கண்டிப்பாக உதவி செய்வார்கள். ஒரு புண்ணியவானாவது முன்வர மாட்டாரா என்று காத்திருந்தவருக்கு, வென்டிலேட்டர் தருவதாக உதவிகள் வந்தன. அதோடு அதிர்ச்சியும் காத்திருந்தது. அவரது மொபைல் எண்ணுக்கு வாட்ஸ் ஆப் மூலம் சிலர் ஆபாச புகைப் படங்களை அனுப்பினர். இதை பார்த்து நொந்து போனார். தனக்கு நேர்ந்த இந்த மோசமான அனுபவம், வேதனையை சமூக வலைதளத்தில் அவர் பகிர்ந்துள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:

அவசர உதவி கேட்டு எனது மொபைல் எண்ணுடன் வேண்டுகோள் விடுத்த அடுத்த நாளில் இருந்து, ஒரு நிமிடத்துக்கு மூன்று அல்லது நான்கு அழைப்புகள் வந்தன. ரத்த வங்கிகளுக்கும் பேசினேன். ரத்ததானம் செய்வோருடன் தொடர்பு கொண்டேன். பிளாஸ்மா தானம் வழங்க தகுதியானவர் தானா எனவும் கேட்டறிந்தேன். உதவிக்கரம் நீட்டி அழைப்புகள் வந்த வண்ணம் இருக்க, இடையிடையே சில மோசமான சூழ்நிலைகளையும் சந்திக்க நேர்ந்தது. ஒருவர் எனக்கு போன் செய்தார். ‘‘நீங்கள் ரத்ததானம் செய்ய விரும்புகிறீர்களா’’ என கேட்டேன். அதற்கு அவர், ‘‘அதெல்லாம் இல்லை. நீங்கள் திருமணம் ஆகாதாவரா என்று எனக்கு தெரிய வேண்டும்’’ எனறார். இப்படி ஒன்றல்ல, பல அழைப்புகள் வந்தன. நான் பிளாஸ்மா தானம் செய்பவருக்காக காத்திருக்க, வந்த அழைப்புகள் பல வேறு விதமாக இருந்தன. சிலர், எனது போன் நம்பரை ஆபாச கதைகளுக்கான இணையதளத்தில் வெளியிட்டுள்ளனர். இதைப்பார்த்து பேசிய சிலர், ‘‘நான் திருமணம் ஆகாதவளாக இருந்தால், படங்களை அனுப்புமாறு கேட்டனர். வாட்ஸ்ஆப்பில் நீங்கள் வைத்துள்ள புகைப்படம் மிகவும் அழகாக இருக்கிறது என புகழ்ந்து தள்ளினார்.

ஒரு சில ‘நண்பர்கள்’ உதவி செய்வதாக கூறி பேச தொடங்கினர். அப்போது, ‘டேட்டிங் கிடைக்குமா?’ என்று கேட்டனர். ஒரு சிலர் ஒரு படி மேலே போய், எனக்கு ஒரே நேரத்தில் சுமார் 7 பேர் ‘குரூப் வீடியோ அழைப்பு’ செய்ய முயற்சி செய்தனர். சிலர் வாட்ஸ் ஆப்பில் தங்களது ஆபாச படங்களை அனுப்பிக் கொண்டே இருந்தனர். எனவே, பெண்களே. உங்களை நான் மன்றாடி கேட்டுக் கொள்கிறேன். ஒரு போதும் பொது வெளியில் உங்கள் மொபைல் நம்பரை வெளியிட்டு விடாதீர்கள். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Related Stories:

>