ஒருநாள் பாதிப்பில் அமெரிக்காவை மிஞ்சியது உலகளவில் இந்தியா முதலிடம்: 24 மணி நேரத்தில் 3.14 லட்சம் பேருக்கு தொற்று

புதுடெல்லி: நாட்டில் நேற்று ஒரே நாளில் 3.14 லட்சம் பேர் பாதிக்கப்பட்டதை தொடர்ந்து, உலகளவில் கொரோனா தொற்று ஒருநாள் பாதிப்பில் இந்தியா அமெரிக்காவை மிஞ்சி உள்ளது. உலகம் முழுவதிலும் கொரோனா 2வது அலை, உருமாறிய கொரோனா வைரஸ் மிக தீவிரமாக பரவி வருகிறது. இந்தியாவிலும் இதன் தாக்கம் தற்போது அதிகரித்து வருகிறது. இந்நிலையில், இந்தியாவில் நேற்று ஒரே நாளில் 3 லட்சத்து 14 ஆயிரத்த உ835 பேர் பாதித்துள்ளனர். இது உலகளவில் ஒரே நாளில் அதிகபட்சமாக தொற்று பாதித்தோரின் எண்ணிக்கையாக பதிவாகி உள்ளது. இதற்கு முன்பு, அமெரிக்காவில் கடந்த ஜனவரி 8ம் தேதி, ஒருநாள் பாதிப்பு 3 லட்சத்து 7 ஆயிரத்து 581 ஆக இருந்தது.   இதன் மூலம், உலகளவில் கொரோனா தொற்று ஒருநாள் பாதிப்பில், அமெரிக்காவை பின்னுக்கு தள்ளி, இந்தியா முதலிடத்துக்கு முன்னேறி உள்ளது. நேற்று காலை 8 மணியுடன் முடிந்த 24 மணி நேரத்துக்கான பாதிப்பு, பலி நிலவரம் பற்றி மத்திய சுகாதாரத் துறை வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:

* நாட்டில் புதிய உச்சமாக கடந்த 24 மணி நேரத்தில் 3 லட்சத்து 14 ஆயிரத்து 835 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.

* இதன் மூலம், கொரோனா தொற்றுக்கு ஆளானவர்களின் மொத்த எண்ணிக்கை 1 கோடியே 59 லட்சத்து 30 ஆயிரத்து 965 ஆக அதிகரித்துள்ளது.

* தொற்று உறுதி செய்யப்பட்டு 22 லட்சத்து 91 ஆயிரத்து 428 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.  

* நேற்று ஒரே நாளில் 1 லட்சத்து 78 ஆயிரத்து 841 பேர் குணமடைந்துள்ளனர். இதனால், நாட்டின் குணமடைந்தோரின் மொத்த எண்ணிக்கை 1 கோடியே 34 லட்சத்து 54 ஆயிரத்து 880 ஆக உயர்ந்துள்ளது.  

* கடந்த 24 மணி நேரத்தில் 2,104 பேர் கொரோனாவால் உயிர் இழந்துள்ளனர். இதனால், மொத்த உயிரிழந்தோர் எண்ணிக்கை 1 லட்சத்து 84,657 ஆக அதிகரித்துள்ளது.  

* நாடு முழுவதும் இதுவரை 13 கோடியே 23 லட்சத்து 30,644 பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

யெச்சூரி மகன் சாவு

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் சீதாராம் யெச்சூரி. இவரது மூத்த மகன் ஆசிஷ் (35). இவர் புனேவிற்கு செல்வதற்கு முன் பல்வேறு பத்திரிக்கைகளில் பணியாற்றி இருக்கிறார்.  இந்நிலையில், கொரோனா நோய் தொற்று காரணமாக ஆசிஷ் பாதிக்கப்பட்டார். கடந்த 2 வாரங்களாக குர்கான் மருத்துவமனையில் அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. ஆனால், சிகிச்சை பலனின்றி நேற்று காலை அவர் இறந்தார். இது தொடர்பாக மார்க்சிஸ் கம்யூனிஸ்ட் பொலிட்பீரோ வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், ‘சீதாராம் யெச்சூரியின் மகன் ஆசிஷ் மறைந்தார் என்பதை வருத்தத்துடன் தெரிவித்து கொள்கிறோம். அவர் கொரோனா நோய் தொற்று பிரச்னை காரணமாக உயிர் இழந்துள்ளார். சீதாராம் யெச்சூரி, அவரது குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துக் கொள்கிறோம்,’ என கூறப்பட்டுள்ளது. திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் உட்பட பல்வேறு கட்சித் தலைவர்கள், இவருடைய மறைவுக்கு இரங்கல் தெரிவித்துள்ளனர்.

வெற்று வாக்குறுதி வேண்டாம்

காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி நேற்று வெளியிட்டுள்ள டிவிட்டர் பதிவில், ‘‘கொரோனா தொற்று காரணமாக வீட்டில் தனிமைப்படுத்திக் கொண்டுள்ளேன். கொரோனாவால் நாடு தவித்து வரும் துயரமான செய்திகள் தொடர்ந்து வந்து கொண்டுள்ளது. பிரச்னை கொரோனா அல்ல. மக்கள் விரோத கொள்கைகள்தான். போலியான கொண்டாட்டங்களையும், வெற்று வாக்குறுதிகளையும் கைவிட்டு ஆக்கப்பூர்வமான தீர்வுகளை கொடுங்கள்’ என்று மத்திய அரசையும், பிரதமர் மோடியையும் மறைமுகமாக சாடியுள்ளார்.

பீகாரில் 500 மருத்துவர், ஊழியர்களுக்கு தொற்று

கொரோனா 2வது அலையில் மருத்துவர்கள், சுகாதார ஊழியர்களும் பெரும் அளவில் பாதிக்கப்பட்டு வருகின்றனர். பீகார் மாநிலம், பாட்னாவில் 2 மருத்துவமனைகளில் 500 மருத்துவர்கள், சுகாதார ஊழியர்கள் கொரோனா தொற்றுக்கு ஆளாகி உள்ளனர். எய்ம்ஸ், பாட்னா மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் மட்டுமே 384 மருத்துவர்கள் பாதித்துள்ளனர். இது தவிர, மருத்துவ ஊழியர்களும் பாதித்துள்ளனர்.

உதவியே தேவையில்லை நாங்களே வாங்கி கொள்வோம்

கேரள முதல்வர் முதல்வர் பினராய் விஜயன் நேற்று அளித்த பேட்டியில், ‘‘கேரளாவில் கொரோனா தடுப்பூசிக்கு கடும் தட்டுப்பாடு  ஏற்பட்டுள்ளது. எங்கள் மாநிலத்துக்கு இலவசமாக தடுப்பூசி வழங்கும்படி மத்திய அரசுக்கு  ஏற்கனவே கடிதம் அனுப்பி உள்ளோம். ஆனால், இதுவரை மத்திய அரசிடம் இருந்து பதில் வரவில்லை. எனவே, கேரளா தனது சொந்த செலவில்   தடுப்பூசிகளை வாங்க தீர்மானித்துள்ளது. இது தொடர்பாக பேச்சுவார்த்தை நடக்கிறது. ,’’ என்றார்.

கொள்ளைக்காரனை விட மோசமானவர் பாஜ எம்எல்ஏ ஆவேசம்

கொரோனா தடுப்பூசியின் விலையை அதை தயாரிக்கும் சீரம் நிறுவனம் நேற்று முன்தினம் உயர்த்தியது. இதை உத்தர பிரதேச மாநிலத்தை சேர்ந்த கோரக்பூர் தொகுதி பாஜ எம்எல்ஏ ராதா மோகன் தாஸ் அகர்வால் கடுமையாக விமர்சித்துள்ளார். ‘சீரம் நிறுவனத்தின் தலைவர் ஆதார் பூனாவலா கொள்ளைக்காரர்களை விட மோசமானவர். தொற்றுநோய் சட்டத்தின் கீழ் உங்கள் தொழிற்சாலை மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்று டிவிட்டரில் தெரிவித்துள்ளார்.

ஸ்பூட்னிக் விலை உயருமா?

ரஷ்யாவின் ஸ்பூட்னிக்- 5 தடுப்பூசியை இந்தியாவில் தயாரிக்கும் உரிமையை ஐதராபாத்தை சேர்ந்த டாக்டர் ரெட்டி ேலப் பெற்றுள்ளது. இந்த தடுப்பூசியை ரூ.750க்கு வழங்கப் ே்பாவதாக சில நாட்களுக்கு முன் அது அறிவித்து இருந்தது. ஆனால், சீரம் நிறுவனம் தனது கோவிஷீல்டு விலையை உயர்த்தி இருப்பதால், ஸ்யூட்னிக் -5 தடுப்பூசி விலையை இன்னும் இறுதி செய்யவில்லை என்று நேற்று ரெட்டி லேப் திடீரென அறிவித்தது.

ஆக்சிஜன் பற்றாக்குறை 5 நோயாளிகள் பலி

உபி.யிலுள்ள தனியார் மருத்துவமனையில் கொரோனாவுக்காக சிகிச்சை பெற்று வந்த 5 நோயாளிகள் நேற்று உயிரிழந்தனர். ஆக்சிஜன் பற்றாக்குறையால் நோயாளிகள் பலியானதாக, அவர்களின் உறவினர்கள் புகார் அளித்தனர். ஆனால், இந்த குற்றச்சாட்டை மருத்துவமனை நிர்வாகம் மறுத்துள்ளது.

தடுப்பூசிகள் திருட்டு

அரியானாவில் உள்ள அரசு மருத்துவமனையில் கொரோனா தடுப்பூசிகளை மர்ம நபர்கள் திருடி சென்றுள்ளனர். 1700 டோஸ்  திருடப்பட்டதாகவும், குற்றவாளி மருத்துவமனையிலிருந்து பணம் உள்ளிட்ட வேறு எதையும் திருடவில்லை என்றும் மருத்துவமனை நிர்வாகம் போலீசில் புகார் அளித்துள்ளது.

Related Stories: