ஜனவரி, பிப்ரவரி, மார்ச் மாதங்களில் 6 பவுன் வரை கூட்டுறவு வங்கிகளில் நகை கடன் பெற்றவர்கள் விவரம் சேகரிப்பு: குளறுபடிகளை தவிர்க்க நடவடிக்கை

சேலம்: தமிழக கூட்டுறவு வங்கிகளில் ஜனவரி முதல் மார்ச் வரை  நகைக்கடன் பெற்றவர்களின் விவரங்கள் சேகரிக்கப்பட்டு வருகிறது. தமிழகத்தில் சட்டமன்ற தேர்தலையொட்டி, நடத்தை விதிகள் அமலில் உள்ளன. இதனிடையே, மாநிலம் முழுவதும் கூட்டுறவு வங்கிகளில், 6 பவுன் வரை பெற்ற நகைக்கடன் தள்ளுபடி செய்யப்படும் என அரசு அறிவித்தது. ஆனால் கூட்டுறவு வங்கிகளில் விதிகளை மீறி பழைய தேதியில் நகைக்கடன் வழங்கப்பட்டு வருவதாகவும், நகைக்கடனை  அப்படியே அதே வங்கியில் டெபாசிட் போட்டு வருவதாகவும் புகார் எழுந்தது. மேலும், கூட்டுறவு வங்கிகளில் நகைக்கடனை பழைய தேதிகளில் வழங்கியது போல் திருத்தம் செய்ததாகவும்  குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

இதையடுத்து கூட்டுறவு உயர் அதிகாரிகள், அனைத்து தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கங்களிலும் நகை கடன் வழங்க வேண்டாம் என வாய்மொழியாக உத்தரவிட்டனர். இதனிடையே, கூட்டுறவு சங்கங்களில் கடந்த  ஜனவரி, பிப்ரவரி, மார்ச் மாதங்களில் பொது நகை கடன் நிலுவை விவரங்களை கணக்கெடுக்க கூட்டுறவு சங்கங்களின் பதிவாளர் சுப்பிரமணி உத்தரவிட்டுள்ளார். இதையடுத்து அனைத்து கூட்டுறவு சங்கங்களும்,  5 பவுன், 6 பவுன் நகை கடன் குறித்த விபரங்களை சேகரித்து வருகிறது.  இது குறித்து அதிகாரிகள் கூறுகையில், ‘‘தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்கள், தொடக்க கூட்டுறவு வேளாண்மை மற்றும் வளர்ச்சி வங்கி, கூட்டுறவு விற்பனை சங்கங்கள், பெரும் பல்நோக்கு கூட்டுறவு சங்கங்கள் சேகரிக்கப்பட்ட பொது நகை கடன் விவரங்களை மண்டல இணை பதிவாளர்களின் மின்னஞ்சலில் அனுப்ப வேண்டும். நகர கூட்டுறவு வங்கிகள் சென்னை மண்டல கூடுதல் பதிவாளருக்கும் அனுப்பி வைக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது,’’ என்றனர்.

Related Stories:

>