மதுரை சித்திரை திருவிழா மீனாட்சியம்மனுக்கு பட்டாபிஷேகம்: நாளை திருக்கல்யாணம்

மதுரை: மதுரை சித்திரை திருவிழாவின் 8ம் நாளான நேற்று மீனாட்சி அம்மனுக்கு பட்டாபிஷேகம் நடந்தது. மதுரையின் மகுடத் திருவிழாவான சித்திரைப் பெருவிழா கடந்த 15ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. 8ம் நாளான நேற்று, மதுரை மீனாட்சி அம்மனுக்கு பட்டாபிஷேகம் நடந்தது.  இரவு 8 மணிக்கு அம்மன் சன்னதி ஆறுகால் மண்டபத்தில் நடந்த பட்டாபிஷேக நிகழ்ச்சியின்போது மீனாட்சி அம்மன், மச்ச முத்திரை, இடப முத்திரை, ரத்தின ஆபரணங்கள் முதலிய அணிகலன்களால் அலங்காரம் செய்யப்பட்டு, பாண்டிய மன்னர்களின் அடையாளமான வேப்பம்பூ மாலை, ராயர் கிரீடம் அணிந்திருந்தார்.

 இரவு 8.20 மணிக்கு கோயில் தக்கார் கருமுத்து கண்ணன், மீனாட்சி அம்மனிடம் இருந்து ரத்தினங்கள் பதித்த செங்கோலை பெற்று, 2ம் பிரகாரத்தை சுற்றி வந்து, மீண்டும் அம்மன் கரத்தில் செங்கோலை சமர்ப்பித்தார். இதன்மூலம் சித்திரை மாதம் முடிசூடி சித்திரை, வைகாசி, ஆனி, ஆடி ஆகிய 4 மாதங்கள் அம்மன் ஆட்சி செய்வதாக கருதப்படுகிறது. கொரோனா தொற்று காரணமாக பட்டாபிஷேக விழாவில் பக்தர்கள் அனுமதிக்கப்படவில்லை. இதைத்தொடர்ந்து நாளை திருக்கல்யாணம் நடைபெறுகிறது.

Related Stories:

>