பாதிரியார்களின் ரூ.25 கோடி பி.எப் பணம் மோசடி: கோவை சி.எஸ்.ஐ. பேராயர் உள்பட 4 பேர் மீது வழக்கு பதிவு

கோவை: கோவை வெள்ளலூர் சி.எஸ்.ஐ. ஐக்கிய ஆலயத்தை சேர்ந்தவர் பாதிரியார் செர்சோம் ஜேக்கப். இவர், கோவை மாநகர குற்றப்பிரிவு போலீசில் ஒரு புகார் மனு அளித்தார். அந்த மனுவில் கூறியிருப்பதாவது: கோவை சி.எஸ்.ஐ. திருமண்டலத்துக்கு சொந்தமான 125 ஆலயங்களில் பாதிரியார்கள் உள்பட ஏராளமான ஊழியர்கள் பணியாற்றுகிறார்கள். நான் கடந்த 2005-ம் ஆண்டு முதல் சி.எஸ்.ஐ. ஆலய நிர்வாகத்தின் கீழ் பல்வேறு இடங்களில் பணியாற்றியுள்ளேன். எனது வருங்கால வைப்பு தொகை கட்டணத்தை முறையாக சி.எஸ்.ஐ. திருமண்டல தலைமை அலுவலகத்திற்கு அனுப்பி வந்தேன். எனது வருங்கால வைப்பு நிதி கணக்கில் எவ்வளவு தொகை செலுத்தப்பட்டுள்ளது என்று சி.எஸ்.ஐ நிர்வாக அலுவலகத்தை தொடர்பு கொண்ட போது அதன் பொருளாளர் எந்தவித பதிலும் அளிக்கவில்லை. இதைத்தொடர்ந்து, வருங்கால வைப்பு நிதி அலுவலகத்தை தொடர்பு கொண்டேன். அப்போது எனது கணக்கில் பணம் செலுத்தப்படவில்லை என்ற தகவல் கிடைத்தது.

கடந்த 2005-ம் ஆண்டு முதல் இதுவரை எனது கணக்கில் தொகை செலுத்தாமல் சி.எஸ்.ஐ. நிர்வாகம் மோசடி செய்துள்ளது. நான் கேட்ட பின்பு தான் 2019-ம் ஆண்டு புதிய கணக்கை தொடங்கி ரூ.45 ஆயிரம் மட்டும் செலுத்தி உள்ளனர். இதுபோன்று 125 ஆலயங்களிலும் இருந்து ஊழியர்களிடம் பிடித்தம் செய்யப்பட்ட வருங்கால வைப்பு நிதி தொகை ரூ.25 கோடியை வருங்கால வைப்பு நிதி அலுவலகத்திற்கு செலுத்தாமல் மோசடி செய்துள்ளனர். எனவே, சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.  இவ்வாறு அவர் கூறி உள்ளார். இதையடுத்து, போலீஸ் கமிஷனர் உத்தரவின் பேரில் நகர குற்றப்பிரிவு போலீசார் பிஷப் திமோத்தி ரவீந்தர் முன்னாள் செயலாளர் சார்லஸ், ஆலோசகர் மங்கள் தாஸ், பொருளாளர் செல்வகுமார் ஆகிய 4 பேர் மீதும் வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனர்.

Related Stories:

>