ஆண் குழந்தை பிறந்ததற்கு பணம் தராததால் ஆத்திரம் பிரசவித்த பெண்ணை வீல்சேரில் இருந்து கீழே தள்ளிய பெண் ஊழியர்

* நாகை அரசு ஆஸ்பத்திரியில் இரக்கமற்ற செயல்

* சமூக வலைதளங்களில் வீடியோ வைரல்

நாகை: நாகை அரசு ஆஸ்பத்திரியில், பிறந்த ஆண் குழந்தைகக்கு பணம் தராததால் பிரசவித்த பெண்ணை வீல் சேரில் இருந்து பெண் ஊழியர் கீழே தள்ளிவிட்டார். அவரின் இரக்கமற்ற செயல், சமூக வலைத்தளங்களில் வீடியோவாக வைரலாகி வருகிறது. நாகை மாவட்டம் திட்டச்சேரி தேவங்குடி கிராமத்தை சேர்ந்தவர் முருகேசன். இவரது மனைவி ராதா. இவர்களது மகள் முருகவள்ளி (20). நிறைமாத கர்ப்பிணியான இவருக்கு நாகை அரசு மருத்துவமனையில் 18ம் தேதி சேர்க்கப்பட்டார். மறுநாள் அறுவை சிகிச்சை மூலம் முருகவள்ளிக்கு ஆண் குழந்தை பிறந்தது. இந்நிலையில் கொரோனா பரிசோதனை முடிவு வராததால் அங்குள்ள கொரோனா வார்டில் வைத்தனர். நேற்றுமுன்தினம் முருகவள்ளிக்கு கொரோனா தொற்று இல்லை என்று பரிசோதனை முடிவு வந்தது. உடனே உறவினர்கள் முருகவள்ளியை சாதாரண வார்டுக்கு மாற்றும்படி கூறியுள்ளனர்.

நீண்ட நேரத்திற்கு பின் முருகவள்ளியை சாதாரண வார்டுக்கு மாற்ற உத்தரவு வந்தது. இதையடுத்து, பெண் பணியாளர் ஒருவர், முருகவள்ளியை வீல் சேரில் ஏற்றி சாதாரண வார்டுக்கு அழைத்து சென்றார். அப்போது உறவினர்களிடம், ஆண் குழந்தை பிறந்துள்ளதால் பணம் தரும்படி கேட்டதாக கூறப்படுகிறது. அதற்கு அவர்கள் எங்களை போன்று இல்லாதவர்கள்தான் அரசு மருத்துவமனைக்கு வருகிறோம் என கூறியுள்ளனர். இதில் கோபமடைந்த அந்த பெண் ஊழியர், முருகவள்ளியிடம் மனம்நோகும்படி வார்த்தைகளை பேசி கொண்டே வீல்சேரில் தள்ளி வந்தார். சிறிது தூரம் வந்த பின்னர் திடீரென வீல்சேரில் இருந்து முருகவள்ளியை கீழே தள்ளிவிட்டுள்ளார். இந்த சம்பவத்தை கண்ட அருகில் இருந்தவர்கள் அதிர்ச்சியடைந்து குழந்தை பெற்ற பெண்ணை இப்படியா கீழே தள்ளிவிடுவது? அதுவும் அறுவை சிகிச்சை அந்த பெண்ணுக்கு ஏதாவது அசம்பாவிதம் நடந்து இருந்தால் பிறந்த குழந்தையை யார் பாதுகாப்பது? பணத்திற்காக ஒரு உயிருடன் விளையாடுவதை நிறுத்தி கொள்ளுங்கள் என கூறினர். இந்த சம்பவத்தை அங்கிருந்தவர்கள் செல்போனில் வீடியோ எடுத்து சமூக வலைதளங்களில் பதிவிட்டுள்ளனர். அந்த வீடியோ வைரலாகி வருகிறது.

Related Stories:

>