கொரோனா ஊரடங்கால் பீச்சுகள் மூடப்பட்டுள்ள நிலையில் ரிசார்ட்களை தேடும் மக்கள்: ஓட்டல்களின் வார இறுதிநாள் பேக்கேஜ் திட்டத்துக்கு வரவேற்பு

சென்னை: கொரோனாவால் கடற்கரைகள் மூடப்பட்டுள்ளதால் கடற்கரை அருகில் உள்ள தங்கும் விடுதிகளுக்கு மவுசு கூடியுள்ளது. கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கையாக தமிழகத்தில் இரவு நேர ஊரடங்கு அமலில் உள்ளது. இரவு 10 மணி முதல் அதிகாலை 4 மணி வரை ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு வருகிறது. பகல் நேரத்தில் மட்டுமே பேருந்து மற்றும் வாகன போக்குவரத்துகளுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளன. ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால், வாரக் கடைசியில் மகிழ்ச்சி கொண்டாட்டங்களில் ஈடுபடுபவர்களுக்கு சிக்கல் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து, அவர்களுக்காக கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள கடற்கரை அருகே, கடற்கரையை பார்த்து கட்டப்பட்டுள்ள விடுதிகள் வீடுகளைப்போல் குடும்பத்தினருடன் தங்கும் வசதிகளை அறிவித்துள்ளன. அதாவது, இந்த ரிசார்ட்டுகளில் வெள்ளிக்கிழமை விருந்தினர்களுக்கு அனுமதி வழங்கப்படுகிறது. திங்கட்கிழமை காலை வரை அந்த ரிசார்ட்டுகளில் பிறந்தநாள், திருமண நாள் மற்றும் திருமண நிகழ்ச்சிகளை கொண்டாடலாம். கடற்கரைக்கு செல்லக்கூடாது. ஆனால், ரிசார்ட்டில் இருந்து  மகிழலாம். ஞாயிற்றுக்கிழமை ரிசார்ட்டை விட்டு வெளியே வரக்கூடாது என்ற நிபந்தனை உள்ளதாம்.

 இதுதொடர்பாக சென்னையில் உள்ள மிகப் பிரபலமான நட்சத்திர ஓட்டல் மேலாளர் ஒருவர் கூறும்போது, ‘‘கொரோனா காரணமாக கடற்கரைகள் மூடப்பட்டிருந்தாலும் கடற்கரையை பார்த்து அமைக்கப்பட்டுள்ள எங்கள் ரிசார்ட்டுகளில் வார இறுதி நாட்களை கொண்டாட ஏற்பாடு ெசய்யப்பட்டுள்ளது. இதற்காக ஒரு பேக்கேஜ் வைத்துள்ளோம். தங்குமிடம், உணவு போன்றவை தரப்படுகிறது. இதனால், தற்போது ஓட்டல்களிலேயே வார இறுதி நாட்களை மகிழ்ச்சியாக கொண்டாடுவது அதிகரித்து வருகிறது. இதன் மூலம் ஓட்டல்களின் வருமானமும் கூடியுள்ளது’’ என்றார்.  சில ரிசார்ட்டுகளில் மது வகைகளும் பரிமாறப்படுகிறதாம். என்னதான் கொரோனா ஊரடங்கு அமலுக்கு வந்தாலும் சிலருக்கு வார இறுதி நாட்களை எப்படி கொண்டாடுவது என்ற கவலை உள்ளதால் இதுபோன்ற ஏற்பாடுகளை செய்துள்ளோம் என்று வேறு ஒரு பிரபல ஓட்டல் மேலாளர் தெரிவித்துள்ளார்.

Related Stories: